ஹைதராபாத்: நடிகை ரம்யா கிருஷ்ணன் 'ரொமாண்டிக்' படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார்.
தமிழ் சினிமா மட்டுமல்லாது தென்னிந்திய மொழித் திரைப்படங்களிலும் ஹிந்தி மொழியிலும் நடித்து பிரபலமானவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்த இவர் சமீபத்தில் பாகுபலி திரைப்படத்தில் சிவகாமி என்னும் பேரரசி கதாபாத்திரத்தில் கம்பீரமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
படையப்பா படத்திற்குப் பின் மீண்டும் ரம்யாவின் இந்த நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம், விஜய் சேதுபதி, சமந்தா, பகத் பாசில் என பல்வேறு நட்சத்திரங்களும் நடித்திருந்த சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து 15 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் தனது கணவர் வம்சி இயக்கத்தில் வந்தே மாதரம் என்ற படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கவிருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன் செய்தி வெளியானது.
இதனிடையே இளம் நடிகர் ஆகாஷ் பூரி, அறிமுக நடிகை கேத்திகா சர்மா ஆகியோர் நடிப்பில் உருவாகிவரும் ரொமாண்டிக் என்னும் படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்துவருகிறார். பிரபல தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகநாத் தயாரிக்கும் இப்படத்தை அனில் பண்டூரி என்பவர் இயக்குகிறார்.
இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார். ரொமான்ஸை மையமாக வைத்து உருவாகும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கோவாவில் நடைபெற்றுவருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக ரம்யா அங்கு சென்றுள்ளார். அவர் அடுத்த 30 நாட்களுக்கு இந்தப் படப்பிடிப்பில் பங்கேற்பார் என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக ஹைதராபாத்தில் நடைபெற்ற படப்பிடிப்பில் ரம்யா கிருஷ்ணன் பங்கேற்றார். கடந்த மாதம் வெளியான ரொமாண்டிக் பட போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.