மேடை நாடகம், சினிமா ஆகிய துறைகளில் இயங்கி வருபவர் ஒய்.ஜி.மகேந்திரன். தற்போது தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இறுதியாக மிஷ்கின் இயக்கத்தில் வெளியான 'யுத்தம் செய்' எனும் படத்தில் தந்தை கேரக்டரில் வாழ்ந்திருப்பார். படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட அவர், அவ்வப்போது செலக்டிவ் ஆன ரோல்களில் நடித்து வருகிறார்.
தற்போது, முழுக்க முழுக்க கர்நாடக சங்கீதத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள 'பார்த்த விழி பார்த்தபடி' எனும் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு மூத்த இசையமைப்பாளர் தட்சிணாமூர்த்தி இசையமைத்துள்ளார். அவரது இசையில் பின்னணி பாடகர் யேசுதாஸ், மகன் விஜய் யேசுதாஸ் மற்றும் அவரது நான்கு வயது மகள் சேர்ந்து ஒரு பாடலை பாடியுள்ளனர்.
தற்போது படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், 'பார்த்த விழி பார்த்தபடி' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதனை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார். அப்போது அருகில் இயக்குநர் சேது இயாள், நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன், அவரது மனைவி சுதா ஆகியோர் உடனிருந்தனர்.