சென்னை போயஸ் தோட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், 'தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் பற்றிய விசாரணை ஆணையத்தின் சம்மன் இன்னும் எனக்கு வந்துசேரவில்லை. வந்தால் உரிய விளக்கம் அளிப்பேன்.
தேசிய மக்கள்தொகை பதிவேடு நாட்டிற்கு மிக அவசியமானது. மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தினால்தான் யார் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவரும். குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு அச்சுறுத்தல் என பீதி கிளப்பப்பட்டுள்ளது. பிரிவினையின்போது செல்லாமல் இதுதான் எங்கள் பூமி என வாழும் இஸ்லாமியர்களை எப்படி வெளியே அனுப்புவார்கள்? இந்திய இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் முதல் ஆளாக குரல் கொடுப்பேன்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இந்தியாவிலுள்ள மக்களுக்குப் பிரச்னை இல்லை என தெளிவாகக் கூறிவிட்டார்கள். இலங்கை அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கவேண்டும் என்பதே எனது நிலைப்பாடு.
மாணவர்கள் நன்கு விசாரித்த பிறகு போராட்டங்களில் ஈடுபடவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இல்லையெனில் அரசியல்வாதிகள் உங்களைப் பயன்படுத்திக் கொள்வார்கள். காவல் துறையினர் மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும்.
நேர்மையான முறையில் வருமானவரி செலுத்திவருகிறேன். அது வருமான வரித்துறையினருக்கே தெரியும். தவறான தொழில் எதுவும் நான் செய்யவில்லை' என்று பேசினார்.