பெங்களூரு (கர்நாடகா): திரையுலகில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக 51ஆவது தாதா சாகேப் பால்கே விருது ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டது.
தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா கரோனா தொற்று பரவல் காரணமாக தள்ளிவைக்கப்பட்ட நிலையில், நேற்று (அக்.25) டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெற்றது. அப்போது துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருதினை வழங்கினார்.
நண்பரை நினைவுக் கூர்ந்த ரஜினி
விருது பெற்றுக்கொண்டப் பேசிய ரஜினிகாந்த், அவரின் வழிகாட்டி கே. பாலசந்தருக்கு விருதை சமர்பிப்பதாகத் தெரிவித்தார். மேலும், பெங்களூருவில் பேருந்து நடத்துனராக பணியாற்றியபோது தன்னை ஊக்குவித்த, தன்னுடன் ஓட்டுநராக பணிபுரிந்த ராஜ் பகதூருக்கும் நன்றியைத் தெரிவித்தார்.
ராஜ் பகதூர்தான் தனக்குள் இருக்கும் நடிப்பை திறமையை உணர்ந்து என்னை நடிக்கும்படி அறிவுறுத்தினார் என மேடையில் தனது நட்புணர்வை நெகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தினார் .
நண்பரின் அறிவுரை
தனது நட்பை விருதுவிழாவில் ரஜினி வெளிப்படுத்தியது குறித்து ராஜ்பகதூர் பெங்களூருவில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்," ரஜினிகாந்த் பேருந்து நடத்துனராக பணியாற்றியபோது, நண்பர்கள் அனைவரும் இணைந்து நாடகங்களை நடத்துவோம். அப்போது ரஜினி முதன்மை கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவார்.
அவரது நடிப்புத் திறமையை கண்டு, அவரை சினிமாவில் நடிக்கும்படி நான் கூறினேன். அவரை சென்னையில் உள்ள திரைப்பட கல்லூரிக்கு சென்று பயிலும்படி நான்தான் அறிவுறுத்தினேன்.
அவர் இரண்டாண்டுகள் அங்கு பயிற்சியெடுத்தார். கல்லூரியில் பயிற்சிக்கு பிறகு, ரஜினி சென்னையில் நாடகங்களில் நடித்து வந்தார். அப்போது, ஒரு நாடகத்திற்கு பிரபல இயக்குநர் கே. பாலசந்தர் சிறப்பு அழைப்பாளராக வந்தார்.
ரஜினியின் நடிப்பைக் கண்ட பாலசந்தர், அவரை அழைத்து தமிழ் கற்றுக்கொள்ளும்படி கூறினார். பெங்களூரு வந்தபின் ரஜினி இதைப்பற்றி என்னிடம் தெரிவித்தார். இதனையடுத்து, நாங்கள் இருவரும் தமிழிலேயே பேசிக்கொள்ள ஆரம்பித்தோம்.
முதல் பட வாய்ப்பு
வெறும் இரண்டு மாதங்களில் ரஜினி, தமிழை நன்றாக கற்றுக்கொண்டார். இதன்பிறகே பாலசந்தர், தான் 'அபூர்வ ராகங்கள்' என்ற திரைப்படத்தை இயக்குவதாகவும், அதில் ஒரு கதாபாத்திரத்தை ரஜினிக்கு கொடுப்பதாகவும் கூறினார்" என்றார்.
50 ஆண்டு கால நட்பு
ரஜினிகாந்த் (எ) சிவாஜி ராவ் கெய்க்வாட் - ராஜ் பகதூர் ஆகியோரின் நட்பு கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. ரஜினி எப்போது பெங்களூரு வந்தாலும், ராஜ் பகதூர் சந்திக்காமல் செல்லமாட்டார். அந்த அளவிற்கு அவர்களின் நட்பு வலுவானதாக இருந்து வந்துள்ளது.
அதேபோல், நேற்று நடைபெற்ற அரசு விழாவின் மேடையிலும் தனது நண்பருக்கு ரஜினி நட்பு பாராட்டி பேசியது பலரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ள நிலையில், சமூக வலைதளத்தில் ரஜினி - ராஜ் பகதூர் இருவரையும், ரஜினி நடித்த 'தளபதி' திரைபடத்தில் வரும் சூர்யா (ரஜினி) - தேவா (மம்மூட்டி) கதாபாதிரங்களுடன் ஒப்பிட்டு ரசிகர்கள் பதிவிட்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: 'தமிழ் மக்கள் இல்லையென்றால் நான் இல்லை'- டெல்லியில் ஒலித்த தலைவரின் குரல்.!