இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் 'தர்பார்' படத்தில் நடித்துவருகிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு காவல் அலுவலராக நடிக்கிறார். லைகா நிறுவனம் பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தில் நயன்தாரா, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதனைத்தொடர்ந்து, 'தர்பார் படத்தின்' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவுற்று இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்றுவருகிறது. மும்பையில் நயன்தாராவுடன் ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலானது.
இந்நிலையில், ரஜினிகாந்த் 'தர்பார்' படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றும் சந்தோஷ் சிவனின் மகன் அப்புவிற்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லும் காணொலிக் காட்சி வலைதளங்களில் வைரலாகிவருகிறது. அந்தக் காணொலியில் பேசிய ரஜினிகாந்த், சிரித்த முகத்துடன் 'ஹாய் அப்பு, பிறந்தநாள் வாழ்த்துகள், ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு. பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடவும். நல்லா படிக்கவும். ஆண்டவன் துணை இருக்கிறார்' என்று பேசியுள்ளார்.
இந்தக் காணொலியைப் பார்த்த ரசிகர்கள் சந்தோஷ் சிவன் மகன் அப்புவிற்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர்.