திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சி ஆரம்பப்பள்ளியை வண்ண ஓவியங்களால் ரஜினி ரசிகர் மன்றத்தினர் அலங்கரித்துள்ளனர்.
திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட மேலப்பாளையம் குறிச்சியில், ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாநகராட்சி ஆரம்பப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இதையடுத்து இப்பள்ளியை புதுப்பொலிவுடன் மாற்ற எண்ணிய ரஜினி மக்கள் மன்றத்தினர், பள்ளியை தத்தெடுத்தனர். இதைத்தொடர்ந்து பள்ளியின் சுற்றுச்சுவர், கட்டடச்சுவர் என அனைத்தையும் புதுமையான வண்ணங்களால் மாற்றியுள்ளனர்.
பள்ளியின் வகுப்பறைக் கட்டடங்களை ரயில் பெட்டி போன்று வண்ணம் தீட்டியுள்ளனர். புவி வெப்பமயமாதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நூலகம் சார்ந்த ஓவியங்கள் வரையப்பட்டு பள்ளி வளாகம் மிகவும் ரம்மியமாக காட்சியளிக்கிறது. எழில் மிக்க வகையில் அமைந்த இந்த ஓவியங்கள் பார்ப்பவர்களை ரசிக்க வைத்துள்ளது.
மேலும், பள்ளி மாணவர்களுக்கு இடையே நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளையும் நிகழ்த்தினர். அவர்களின் இந்தச் செயலை அப்பகுதி மக்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
இதேபோல் தமிழ்நாடு முழுவதும் ரஜினி மக்கள் மன்றத்தினர் பல்வேறு மக்கள் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ரஜினி மீது வழக்குப்பதிவு? - 9ஆம் தேதி தீர்ப்பு!