நாடு முழுவதும் கரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. தொற்று பரவலை தடுக்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மே 1ஆம் தேதி முதல் 18 வயது நிரம்பிய அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்தது. தற்போது 2 வயது முதல் 18 வயதுள்ள பிரிவினருக்கு கோவாக்ஸின் கரோனா தடுப்பு மருந்தை செலுத்தி பரிசோதனை நடத்திக்கொள்ள பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ) அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் கரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸை செலுத்திக் கொண்டார் என அவரது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள அவர், "அனைவரும் கரோனா தொற்றுக்கு எதிரான இந்த போரை ஒன்றாக எதிர்த்துப் போராடுவோம்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
ஹைதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பை முடித்து விட்டு நடிகர் ரஜினிகாந்த் நேற்று தனி விமானம் மூலம் சென்னை திரும்பினார். இந்நிலையில் 'அண்ணாத்த' திரைப்படத்தின் இறுதி கட்டப் படப்பிடிப்பானது, மேலும் பத்து நாட்களுக்கு கொல்கத்தாவில் நடைபெற உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.