வைத்தியநாதன் ஃபிலிம் கார்டன் நிறுவனம் சார்பில் V.பழனிவேல் தயாரிப்பில், இயக்குநர் A.வெங்கடேஷ் இயக்கத்தில், விஜய் சத்யா, ஷெரீன் நடித்துள்ள திரைப்படம் 'ரஜினி'.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் பெயரில், ஆக்சன் மற்றும் கமர்ஷியல் கலந்த குடும்பத் திரைப்படமாக உருவாகியுள்ளது 'ரஜினி' திரைப்படம். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவினில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, T.G.தியாகராஜன், K.ராஜன், இயக்குநர் செல்வமணி, மனோபாலா, நடிகை ஜெயச்சித்ரா, இசையமைப்பாளர் இமான், கல்வியாளர் AC சண்முகம், இயக்குநர் RV உதயகுமார், T. சிவா, நடிகர் ஜீவன், அடிதடி படப்புகழ் முருகன், தீனா, ஜாகுவார் தங்கம், ஜான் மேக்ஸ், சக்தி சிதம்பரம், திருமலை உள்படப் பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
’ரஜினி’ என்ற பெயரினாலே வெற்றி உறுதி
தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பேசியதாவது, 'ரஜினி என்ற பெயரைக் கேட்டவுடனே வெற்றி உறுதியாகிவிட்டது. ஆம் ரஜினி என்ற பெயர் உலகம் முழுதும் ஓங்கி ஒலிக்கக்கூடிய பெயர். தம்பி பழனிவேல் தொடர்ந்து திரைப்படங்கள் எடுக்கும் நல்ல பண்பாளர். இந்தப் பெயருக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் படமெடுக்கும் திறமை பெற்றவர்.
இயக்குநர் A.வெங்கடேஷ், 'ரஜினி' என்ற பெயரில் நடிக்கும் சிறப்பைப் பெற்றிருக்கிறார், தம்பி விஜய் சத்யா. இசையமைப்பாளர் அம்ரீஷ், பாடகர் சித் ஶ்ரீராமினை வைத்து அழகான பாடல் தந்துள்ளார். இப்படம் அருமையான வெற்றியைப் பெற அனைவருக்கும் வாழ்த்துகள்.
இயக்குநர் ஆர். கே. செல்வமணி பேசியதாவது, 'இயக்குநர் வெங்கடேஷ் மற்றும் தயாரிப்பாளர் பழனிவேல் இருவருக்காக தான் இங்கு வந்தேன். இந்தப்படம் பற்றி சொன்னபோது ஏதோ சின்ன படம் எடுக்கிறார்கள் என்று தான் நினைத்தேன். ஆனால், இந்தப்பட இன்விடேசன் பார்த்தபோது பிரமிப்பாகவும், பிரமாண்டமாகவும் இருந்தது.
இங்கு வந்து பார்த்த போது ’ஏய்’,’பகவதி’ போல் பிரமாண்டமாகத் தெரிகிறது. நிச்சயமாக இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெறும். தயாரிப்பாளர் படமெடுப்பது இன்றைய சூழலில் கடினமாக இருக்கிறது. நாயகன் பார்க்க அப்படியே ஜெயம் ரவி போல் இருக்கிறார். ட்ரெய்லர் காட்சிகள் எல்லாம் அருமையாக இருந்தன. தனுஷுடன் நடித்தவர்கள் அம்மாவாக கூட நடிக்க முடியாமல் இருக்கும்போது, அவருடன் நடித்த நடிகை ஷெரீன் புதுமுக நாயகி போல் அழகாக இருக்கிறார். மிக நல்ல கலைஞர்கள் இணைந்து மிகப் பிரமாண்ட படைப்பாக இப்படத்தை செய்துள்ளார்கள். படம் வெற்றி பெற வாழ்த்துகள்.
கதை இல்லையென்றால் படம் ஓடாது..!
தயாரிப்பாளர் K.ராஜன் பேசியதாவது, 'சினிமாவில் மாவீரன், மகா தைரியசாலி தயாரிப்பாளர் பழனிவேல் தான். கரோனா கடின காலத்திலும் இரண்டு படங்கள் எடுக்கிறார். இயக்குநர் A.வெங்கடேஷ் கமர்ஷியல் இயக்குநர், மக்கள் விரும்பி பார்க்கக்கூடிய படங்களை கமர்ஷியலாக தரக்கூடியவர். இருவரும் இணைந்து ஒரு நல்ல படம் தருகிறார்கள்.
ரஜினி எனப்பெயர் வைத்ததால் இந்தப்படம் ஜெயிக்கும் என்கிறார்கள். இல்லை. பெயரால் எந்தப்படமும் ஜெயிக்காது. கதை இல்லாவிட்டால் எந்தப் பெரிய நடிகர் படமும் ஜெயிக்காது. கதை தான் முக்கியம். A.வெங்கடேஷ் கண்டிப்பாக கதை வைத்திருப்பார். நாயகனுக்கு உண்டான எல்லா அம்சமும் விஜய் சத்யாவிடம் இருக்கிறது. அந்தத் தம்பியை பார்க்கும் போதே ஒழுக்கம் நிறைந்தவர் எனத்தெரிகிறது. தயாரிப்பாளரை மறக்காமல் இருந்தால் தான் நீங்கள் வளர்வீர்கள். எல்லோரும் நன்றாக வர வேண்டும். அதே நேரம் தயாரிப்பாளரைக் காப்பாற்றுங்கள். எல்லோருக்கும் வாழ்த்துகள்.
காணாமல் போன ஷெரீன் சேலை கட்டி வந்திருக்கிறார். சேலை கட்டியத் தமிழ் பெண்ணாக மாறுங்கள். தமிழ் சினிமா உங்களை வாழவைக்கும். இப்போது கதை இல்லாமல் சமீபத்தில் வந்த பிரமாண்ட படங்களின் ஹீரோக்கள் எல்லாம் காலி. ஆனால், A.வெங்கடேஷ் கதை இல்லாமல் படமெடுக்கமாட்டார். இந்தப்படம் கண்டிப்பாக பெரிய வெற்றி பெறும். எல்லோருக்கும் வாழ்த்துகள் நன்றி' என்றார்.
இதையும் படிங்க:அசால்ட் காட்டும் அரபிக் குத்து; 100 மில்லியனை தாண்டியது...!