கறுப்பு-வெள்ளை திரைப்பட காலம் முதல் தற்போது உள்ள டிஜிட்டல் தொழில்நுட்பக் கால சினிமாவரை 200-க்கும் மேற்பட்ட திரைக்கதை எழுதியவர் கதாசிரியர் கலைஞானம். இவர் தமிழ் சினிமாவில் கதாசிரியராக மட்டுமல்லாது நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என பன்முகத் தன்மையுடன் வலம்வந்துள்ளார்.
1978ஆம் ஆண்டு இவரது தயாரிப்பில் வெளியான 'பைரவி' திரைப்படத்தில்தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாயகனாக அறிமுகப்படுத்தப்பட்டார். ரஜினிகாந்த் மட்டுமல்ல இன்று திரையுலகில் இருக்கும் பல ஜாம்பவான்களை ஊக்குவித்து உருவாக்கியவர்.
திரைத் துறையில் 75 ஆண்டுகளாக கதாசிரியராக இருந்துவரும் கலைஞானத்திற்கு சென்னை கலைவாணர் அரங்கில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் கலைஞானத்திற்கு 'கதை சக்கரவர்த்தி' என்ற பட்டம் வழங்கப்பட்டது. இதில் இயக்குநர் பாரதிராஜா, நடிகர் ரஜினிகாந்த், அமைச்சர் கடம்பூர் ராஜு, நடிகர்கள் சிவக்குமார், பாக்யராஜ், இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, கவிஞர் வைரமுத்து ஆகியோர் பங்கேற்றனர்.
இதில் சிவக்குமார் பேசுகையில், இத்தனை பெருமைக்குரிய 'கலைஞானம்' இன்னும் வாடகை வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறார், இதனை அமைச்சர்கள் கருத்தில்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அவரைத் தொடர்ந்து அமைச்சர் கடம்பூர் ராஜு, 'கலைஞானம்' அவர்களுக்கு 75ஆவது ஆண்டு பாராட்டு விழா நடைபெற்றதுபோல 100ஆவது ஆண்டு பாராட்டு விழாவும் தமிழ்நாடு அரசு சார்பில் நடத்தப்படும் எனத் தெரிவித்தார்.
தமிழ் திரைப்படத்தை தமிழ்நாடு அரசு எப்பொழுதும் கைவிடாது என குறிப்பிட்ட கடம்பூர் ராஜு, காரணம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற நல்ல மனிதர்கள் சினிமாவில் இருந்து வந்தவர்கள் எனக் கூறினார். மேலும், வாடகை வீட்டில் இருக்கும் 'கலைஞானம்' அவர்களுக்கு வீட்டுவசதி வாரியத்தின் மூலமாக குடியிருப்பு வழங்க முதலமைச்சரிடம் எடுத்துரைக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.
பின் நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில், 'கதாசிரியர்களுக்கு மரியாதை வழங்க வேண்டும். படத்தின் ஆரம்பத்தில் கதாசிரியர் பெயரை வைத்து மக்களுக்கு கொண்டுசெல்ல வேண்டும். அமைச்சர் கடம்பூர் ராஜு, கலைஞானத்திற்கு வீட்டுவசதி வாரியத்தின் மூலமாக வீடு வழங்குவதாக கூறியதற்கு நன்றி. ஆனால் அந்த வாய்ப்பை அரசுக்கு அளிக்க மாட்டேன். அந்தப் பொறுப்பை நானே ஏற்கிறேன். அவரது இறுதி மூச்சு என்னுடைய வீட்டில்தான் போக வேண்டும்' என்று அவர் தெரிவித்தார்.