சென்னை: கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் புதிய படம் குறித்த தகவல்கள் கோலிவுட்டில் உலா வருகின்றன.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் - லதா தம்பதியினரின் திருமண நாளான இன்று (பிப்ரவரி 26) பிரபலங்களும், ரசிகர்களும் அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். #HappyAnniversaryThalaiva என்ற ஹேஷ்டேக்கில் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
இதையடுத்து இந்த நாளில் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக ரஜினியின் அடுத்தப் படம் குறித்து முக்கியத் தகவல் உலா வந்துகொண்டிருக்கிறது.
அதன்படி, ரஜினியின் புதிய படமான 'தலைவர் - 169'ஆவது படத்தை உலகநாயகன் கமல்ஹாசன், தனது ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பாகத் தயாரிக்கவுள்ளாராம்.
இந்தப் படம் வரும் மார்ச் முதல் வாரம் பூஜையுடன் தொடங்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அநேகமாக மார்ச் 5ஆம் தேதி படத்தின் பூஜை நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.
இந்தப் படத்தை தளபதி விஜய்யின் 'மாஸ்டர்' படத்தை இயக்கி வரும் 'லோகேஷ் கனகராஜ்' இயக்க இருப்பதாகவும் பேசப்படுகிறது.
முன்னதாக, விஜய்க்கு அடுத்தாக ரஜினி படத்தை இயக்குவதற்கு 'லோகேஷ் கனகராஜிடம்' பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்கள் வெளிவந்தன.
'கைதி' படத்தைப் பார்த்துவிட்டு ரஜினிகாந்த், படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜை ஃபோனில் பாராட்டினார். இதனையடுத்து ரஜினியை அவரது இல்லத்துக்கு நேரில் சென்று சந்தித்து நன்றி தெரிவித்தார், லோகேஷ் கனகராஜ்.
இதைத்தொடர்ந்து தற்போது கமல் தயாரிக்க, ரஜினி நடிக்கவிருப்பதாக அவரது திருமண நாளில் தகவல்கள் பரவி வருகிறது. இதுதொடர்பாக யாரும் இச்செய்தியை உறுதிபடுத்தவில்லை.
ரஜினியும் - கமலும் இணைந்து கடைசியாக 1985ஆம் ஆண்டில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான இந்திப் படம் ஒன்றில் கேமியோ கதாபாத்திரத்தில் தோன்றினர்.
தற்போது இந்த தகவல் உறுதியானால், 35 ஆண்டுகள் கழித்து மீண்டும் இவர்கள் இருவரும் இணையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், இந்தப் படத்திலும் ரஜினி - கமல் இணைந்து ஏதாவது காட்சியில் தோன்றி ரசிகர்களுக்கு விருந்து அளிப்பார்கள் என்கிற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அடி தூள்... ரஜினிகாந்த் படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்?