2011ஆம் ஆண்டு லாரன்ஸ் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் ஹிட்டடித்த படம் ‘காஞ்சனா’. இந்தப் படத்தை லாரன்ஸ் இந்தியில் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. அக்ஷய் குமார், கியாரா அத்வானி ஆகியோர் முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடிக்கும் படத்துக்கு ‘லக்ஷ்மி பாம்’ என பெயரிடப்பட்டது. சில நாட்களிலேயே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. லாரன்ஸிடம் ஆலோசனை செய்யாமலே ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. இதனால் கடுப்பான லாரன்ஸ் படத்தில் இருந்து விலகுவதாக அறிக்கை வெளியிட்டிருந்தார். ஆனால் அக்ஷய் குமார் மீதுள்ள மதிப்பால், ‘காஞ்சனா’ கதையை ஒப்படைக்கவும் தயார் என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.
கேப் ஆஃப் குட் பிலிம்ஸ், துஷார் எண்டெர்டய்ன்மெண்ட், ஷபினா எண்டெர்டய்ன்மெண்ட் ஆகிய பேனர்களில் ஷபினா கான், துஷார் கபூர் இந்தப் படத்தை தயாரிக்க முடிவு செய்திருந்தனர். லாரன்ஸ் படத்தில் இருந்து விலகுவதாக அறிக்கை வெளியிட்டது பாலிவுட் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு ‘லக்ஷ்மி பாம்’ தயாரிப்பாளர்கள் லாரன்ஸிடம் சமாதானம் பேச சென்னை வந்திருந்தனர். லாரன்ஸிடம் ஆலோசனை செய்யாமல் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டதற்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டிருக்கிறார்கள். இதனையடுத்து லாரன்ஸ் ‘லக்ஷ்மி பாம்’ படத்தை இயக்க முடிவு செய்துள்ளார்.