சென்னை: கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த, தனது அறக்கட்டளை குழந்தைகள் சிகிச்சை முடிந்த நலமுடன் திரும்பியுள்ளதாக நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: 'எனது அறக்கட்டளை குழந்தைகள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர்கள் அனைவரும் சிகிச்சை முடிந்து மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு நலமுடன் திரும்பியுள்ளனர் என்ற நற்செய்தியை நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.
தற்போது அவர்கள் அனைவரும் எனது அறக்கட்டளையின் அரவணைப்பில் இருக்கிறார்கள். அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், மருத்துவர்கள், செவிலியர் ஆகியோரின் தன்னலமற்ற சேவையே குழந்தைகள் கரோனாவிலிருந்து மீளக் காரணம். உதவிய அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நான் மற்றவற்களுக்கு செய்யும் சேவை, எனது குழந்தைகளை காப்பாற்றியுள்ளது என நம்புகிறேன். இவர்கள் நலம் பெற வேண்டி பிரார்த்தனை செய்த அனவருக்கும் நன்றிகள்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில நாள்களுக்கு முன்னர், தனது அறக்கட்டளையைச் சேர்ந்த 18 குழந்தைகள், 3 ஊழியர்கள்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ராகவா லாரன்ஸ் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது பூரண குணமடைந்துள்ளதாக அறிவித்துள்ளார்.