தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அளித்த பேட்டியில், 'நடிகர் ராகவா லாரன்ஸ் எந்த ஒரு சமூக சேவையும் செய்யவில்லை. அவர் போலியாக தனக்கு விளம்பரம் தேடிக்கொள்கிறார். உடல் ஊனமுற்றோருக்கும் திருநங்கைகளுக்கும் சேவை செய்வதாக தன்னை விளம்பரப்படுத்தி வருகிறார். ராகவா லாரன்ஸ் செய்யும் சேவைக்கு முறையற்ற வகையில் பணம் வருகிறது, அதைப்பற்றி கேட்க யாரும் முன் வருவதில்லை ஏன்' என சரமாரியாகத் தாக்கிப் பேசியிருந்தார்.
இந்நிலையில், தருமபுரி மாவட்ட ராகவா லாரன்ஸ் மக்கள் சேவைப் பணி நற்பணி மன்றத்தினர், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறியதைக் கேட்டு மிகுந்த மன வேதனை அடைந்தனர். இதையடுத்து ராகவா லாரன்ஸ் மீது பொய் செய்தி பரப்பியதாகக் கூறி, சுரேஷ் காமாட்சி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். இந்த சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.