அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள பன்மொழி திரைப்படமான ராதே ஷியாமின் போஸ்டர்கள், ஏற்கனவே வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளன. பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தில் காதல் நாயகனாக சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபாஸ் நடிக்கிறார். ராதா கிருஷ்ண குமார் இப்படத்தை இயக்குகிறார். யூவி கிரியேஷன்ஸ் படத்தை தயாரிக்கிறது. ரோம் உள்ளிட்ட அழகிய நகரங்கள் பலவற்றிலும் இப்படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இன்றைய தெலுங்கு புத்தாண்டு. நாளைய தமிழ் புத்தாண்டு தினங்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக 'பல பண்டிகைகள், ஒரே காதல்' என்று தலைப்பிட்ட புதிய போஸ்டரை ’ராதே ஷியாம்’ படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இதில், பிரவுன் உடையில் அக்கால கதாநாயகர்களை நினைவுபடுத்தும் வகையில் பிரபாஸ் காணப்படுகிறார். சமூக வலைதளங்களில் படக்குழுவினர் இந்த போஸ்டரை வெளியிட்டு தமிழ், தெலுங்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
இப்படம் இந்த ஆண்டு ஜூலை 30ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்ட நிலையில், கரோனா பரவல் காரணமாக படத்தின் வெளியீடு தள்ளிப்போகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:’கர்ணனாக வாழ்ந்த தனுஷைக் கொண்டாடும் அனைவருக்கும் நன்றி’