தென்னிந்திய சினிமா டெலிவிஷன் ஆர்டிஸ்ட் & டப்பிங் ஆர்டிஸ்ட் யூனியன் சங்க தேர்தல் பிப்ரவரி 15ஆம் தேதி சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் ஜனவரி 29, 30, 31 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
இதற்கான விண்ணப்பம் இன்று வழங்படுகிறது. இந்த விண்ணப்பத்தை பெறவந்த நடிகர் ராதாரவி பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், நான் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளதாக தவறான தகவல் பரவியுள்ளது. நான் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை. வேட்புமனுத் தாக்கல் செய்யும் நாளில் வெளியூர் செல்லவிருப்பதால், என் சார்பாக கடிதம் ஒன்று சமர்பிக்கவுள்ளேன். ஓய்வு பெற்ற நீதிபதி ரவி தலைமையில் அனைத்தும் நடைபெறும்.
23 பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். ஒரு தலைவராக அதற்கான வேலைகளை பார்க்கவே நான் இன்று இங்கு வந்தேன். டப்பிங் யூனியனில் உறுப்பினர்களுக்கு தமிழைத் தவிர மற்ற மொழிகள் பேசுவதற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. குறிப்பாக இது மற்ற மொழிகளில் சென்று உறுப்பினர்கள் பணியாற்றுவதற்கு பயனுள்ள வகையில் அமையும்.
அசுரன் திரைப்படத்தில் திருநெல்வேலி பாஷையை அழகாக பேசிய கலைஞர்களுக்கும், இயக்குநர் வெற்றிமாறனுக்கும் நன்றி. ஆங்கிலம், தெலுங்கு, தமிழ், இந்தி என்று தனித்தனி மொழிக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், நடிகர் சங்கத்தின் காலம் முடிந்த பிறகும் 6 மாதம் காலம் நீட்டித்தது முதல் குற்றம். என்னை உறுப்பினராக சேர்த்துக்கொள்ளலாம் என்று நீதிமன்றமே கூறிய நிலையில், அடிப்படை உறுப்பினரிலிருந்தும், இ-பதிவேட்டிலிருந்தும் நீக்கியது இரண்டாவது குற்றம். ஒழுங்காக பார்ம் 6 படிவம் வந்து சேரவில்லை. அதற்கு முன் நடிகர் சங்க தேர்தலை நடத்திவிட்டார்கள்.
1000 தபால் ஓட்டுகள் பெற்றுவிட்டோம் என்று ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் முன்பே விஷால் அவர் வாயாலே மாட்டிக்கொண்டார். அதனால்தான் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. இவை அனைத்தும்தான் தேர்தல் மறுபடியும் நடக்க காரணமாக இருக்கிறது என்றார்.
இதையும் வாசிங்க: 'பெற்றோரை இளைஞர்கள் முதியோர் இல்லத்தில் சேர்க்காதீர்கள்' - நடிகர் ராதாரவி