ஆர்யா ஆதி இண்டர்நேஷனல் மூவீஸ் தயாரித்திருக்கும் திரைப்படம் 'வன்முறை’. தமிழ், மலையாளம் என இரு மொழிகளிலும் உருவாகி உள்ள இந்தப் படத்தில் கதாநாயகனாக ஆர்.கே. சுரேஷ் நடித்துள்ளார். மேலும் அர்ஷிதா ஸ்ரீதர், வினோத், நேகா சக்சேனா, சார்மிளா, அபுபக்கர், ரத்னவேலு, மாஸ்டர் ஷகர் அப்துல் லத்தீப் என பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.
கேரள இயக்குநர் மஞ்சித் திவாகர் தமிழில் இயக்குநராக அறிமுகமாகியுள்ள இந்தப் படமானது, பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள், கொடுமைகள் குறித்து பேசவருகிறது.
படம் குறித்து பேசிய இயக்குநர் மஞ்சித் திவாகர், தமிழ்நாட்டில் இயக்குநராக அறிமுகமாவதில் தான் பெருமைப்படுவதாகவும், புதிய முயற்சிகள் அனைத்திற்கும் தமிழ் ரசிகர்கள் கைக்கொடுப்பதாகவும் தெரிவித்தார். தமிழர்கள் படம் இயக்கும் நபர் யார் என்று சிந்திக்காமல் அவரின் தனித் திறமையை மட்டுமே பார்ப்பதாக கூறிய இயக்குநர், அதனால்தான் நம்பிக்கையுடன் இங்கே தமிழ்படம் இயக்க வந்திருப்பதாகத் தெரிவித்தார். இது பெண்களுக்கு ஓர் எச்சரிக்கை மணியாக இருக்கும் எனவும் மஞ்சித் திவாகர் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர், இன்றைய காலகட்டத்தில் பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல அச்சப்படும் சூழல் நிலவுவதாகவும், பெண்களுக்கு எதிரான பல குற்றங்கள் குறித்த உண்மைகள் வெளியில் தெரியாமலேயே புதைக்கப்படுவதாக கூறினார். நம் கண்முன்னே பொள்ளாச்சியில் நடந்த தொடர் கொடூரங்கள், தெலங்கானாவில் நடைபெற்ற கொடுமை எல்லாம் மக்கள் மனதில் ஆறாத ரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது எனவும் மஞ்சித் கூறினார். மேலும் இதுபோன்ற சம்பவங்களை மையமாக வைத்து பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 'வன்முறை' படம் உருவாகியுள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும், இந்தப் படத்தின் கதை கேரளாவிலிருந்து தமிழ்நாட்டுக்கு வரும் இளம் பெண்ணுக்கு ஒரு கொடுமை ஏற்படுவதாகவும், அது குறித்து விசாரிக்கும் பொறுப்பு நிறைந்த காவல்துறை அலுவலராக வரும் ஆர்.கே. சுரேஷ், குற்றத்தின் பின்னணியில் இருக்கும் அதிர்ச்சியூட்டும் உண்மைகளைத் தேடிச் சென்று குற்றங்களின் ஆரம்பம் எங்கே இருக்கிறது என்று அறிவதற்காக எடுக்கும் அதிரடி நடவடிக்கைகள் குறித்து திரைக்கதை இருக்கும் என்றார்.
இப்படத்தை பார்த்த தணிக்கைத் குழு, பெண்களுக்கு எச்சரிக்கைத் தரும் வகையில் உருவாகியுள்ளது என்று பாராட்டியது மகிழ்ச்சி அளிக்கிறது என இயக்குநர் மஞ்சித் திவாகர் தெரிவித்தார். இப்படம் ஜனவரி 3ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.
இதையும் படிங்க: புத்தாண்டு முதல் புதிய பெயரில் வலம்வரப்போகும் 'ஆரி'