சென்னை: பப்ஜி படத்தின் கதாநாயகன் அர்ஜுமனின் மாறுபட்ட புதிய லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
'தாதா 87' வெற்றிப் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி, தனது ஜி மீடியா நிறுவனம் மூலம் தயாரிக்கும் படம் 'பொல்லாத உலகில் பயங்கர கேம்'. பப்ஜி என்று அழைக்கப்படும் இந்தப் படத்தில் கதாநாயகன் அர்ஜுமன் பெண் கதாபாத்திரம் ஒன்றில் தோன்றவுள்ளார்.
இதையடுத்து அந்தக் கதாபாத்திரத்திற்கான போஸ்டரைப் படக்குழுவினர் கார்த்திகை திருநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ளனர். காதில் ஜிமிக்கி கம்மல், நெற்றியில் பொட்டு, விபூதி என அச்சு அசல் பெண் கதாபாத்திரத்தில் போஸ்டரில் தோற்றமளிக்கிறார் அர்ஜுமன்.
'கார்த்திகை தீபம் ஏற்ற வந்தவள்' என்று அதில் குறிப்பிட்டு, 'தீபம்' என்ற வார்த்தையில் 'தீ' என்ற எழுத்தை மட்டும் சிவப்பு நிறத்தில் குறித்திருப்பதை, அர்ஜுமனுக்கு ஆன்ட்டி ஹீரோ கதாபாத்திரமாக இருக்கலாம் என ரசிகர்கள் இணையத்தில் கருத்து தெரிவித்துவருகின்றனர்.
கடந்த சில நாள்களுக்கு முன் படத்திலிருந்து 'கள்ள காதலா' என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியிடப்பட்டது. இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி இந்தப் பாடலை எழுத, எஸ்.எஸ். தமன் இசையமைத்துள்ளார். இப்பாடல் ரசிகர்களைக் கவர்ந்து இணையத்தில் அதிகமாகப் பகிரப்பட்டுவருகிறது.
இதைத்தொடர்ந்து தற்போது படத்தின் கதாநாயகன் அர்ஜுமனின் மாறுபட்ட லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். நடிகர் விக்ரம் தங்கை அனிதாவின் மகன் அர்ஜுமன் பப்ஜி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
'பிக் பாஸ்' புகழ் ஐஸ்வர்யா தத்தா கதாநாயகியாக நடிக்கிறார். நடிகை அனித்ராநாயர், ஆராத்யா, சாண்ட்ரியா, 'நடோடிகள்' சாந்தினி, மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி, 'பிக்பாஸ்' ஜூலி உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.
இந்தப் படம் 2021ஆம் ஆண்டு பொங்கல் வெளியீடாக ரசிகர்களுக்கு விருந்து படைக்க வருகிறது.
இதையும் படிங்க: அக்ஷரா ஹாசனின் 'அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு': சர்வதேச திரைப்பட விழாவிற்குத் தேர்வு