தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் 2020-2022ஆம் ஆண்டிற்கான தேர்தல் வருகின்ற நவம்பர் 22ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் டி. ராஜேந்தர் தலைமையில் ஒரு அணியும், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தலைமையில் ஒரு அணியும், தயாரிப்பாளர் தேனப்பன் தலைமையில் ஒரு அணியும் போட்டியிடுகின்றனர்.
இவர்களைத் தவிர தயாரிப்பாளர் விஜய சேகர் தலைமையில் ஓயாத அலைகள் என்று நான்காவது அணியும் போட்டியிடுகிறது. இதுதொடர்பாக தயாரிப்பாளர் விஜயசேகர் நமது ஈடிவி பாரத்திற்கு அளித்த பேட்டியில், "வருடத்திற்கு 150 தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். சுமார் 500 முதல் ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுகிறது.
தயாரிப்பாளர்கள் அனைவரும் தனித்துவிடப்பட்ட நிலையில் தனித்தாளும் சூழ்ச்சியால் தனியாகப் பிரிந்திருந்தனர். தயாரிப்பாளர் சங்கத்தில் ஆயிரத்து 303 தயாரிப்பாளர்கள் வாக்களிக்கக் கூடிய தகுதியானவர்களாக உள்ளனர்.
ஆயிரம் தயாரிப்பாளர்கள் சிறு, நடுத்தர படங்கள் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் ஆவர். இவர்கள்தான் 99 விழுக்காடு பாதிக்கப்படுகின்றனர். அவர்களின் பிரச்னையை கேட்பதற்கு இங்கு ஆளில்லை. தேர்தல் வந்துவிட்டால் சிறு படத் தயாரிப்பாளர்களை நலம் காப்போம் என்று வாக்குறுதி கொடுக்கின்றனர்.
வெற்றிபெற்ற பின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவது இல்லை. இதனால் பாதிக்கப்படும் தயாரிப்பாளர்கள் வருடத்திற்கு 150-க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர்.
இந்தப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கும் பிரிந்த தயாரிப்பாளர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும். அதற்காகவும் சுமார் 700 தயாரிப்பாளர்களைக் கொண்ட நமக்கு நாமே என்று வாட்ஸ்அப் குரூப் ஒன்றை உருவாக்கி தயாரிப்பாளர்களின் பிரச்னைகள் குறித்து ஆலோசனை செய்தோம்.
தயாரிப்பாளர் சங்க நிர்வாகத்திற்குச் செல்லாமல் வெளியில் நின்று நம் பிரச்னைகள் கூறுவதால் எந்தப் பலனும் இல்லை என்ற கருத்து ஏற்பட்டது.
இதனை அடுத்து சங்கத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டு 'ஓயாத அலைகள் அணி' என்ற பெயரில் நாங்கள் 21 செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிடுகிறோம்" என்றார்.
இதையும் படிங்க: ’ஆட்சியைக் காக்க முள்ளிவாய்க்காலில் உயிர்பலி கொடுத்தவர் ஸ்டாலின்'