சென்னை: தயாரிப்பாளர் தணிகைவேல் ஐந்தாயிரம் ஏழை குடும்பங்களுக்கு ஒரு மாத நியாயவிலைக் கடை பொருள்கள் வழங்கியுள்ளார்.
ஆர்எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த எஸ். தணிகைவேல் 'நேற்று இன்று', 'இரவும் பகலும் வரும்', 'போக்கிரி மன்னன்' உள்ளிட்ட சில படங்களை வாங்கி வெளியிட்டுள்ளார். தற்போது இவர் ஒற்றைப் பனை மரம் என்ற புதிய படத்தை தயாரித்துவருகிறார்.
இதையடுத்து இவர் திருவண்ணாமலை பகுதியிலுள்ள ஐந்தாயிரம் ஏழைக் குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கான நியாயவிலைக் கடை பொருள்களை இலவசமாக வழங்கினார்.
கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இதனால் தினக்கூலி தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் அமைப்பு சாரா தொழிலாளர்கள் வேலையிழந்து நாடு முழுவதும் வறுமையில் லட்சக்கணக்கான குடும்பங்கள் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கின்றன.
இவர்களிள் பலர் ஒருவேளை உணவின்றியும் தவித்துவருகின்றனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில் பாதிக்கப்பட்டுள்ளவர்களை ஆதரிப்பதற்காக சமூக அமைப்புகள் முன்வந்து உதவிவருகின்றன.
அந்த வகையில் திருவண்ணாமலை நகரில் தியாகி அண்ணாமலை நகர், கீழ்நாத்தூர், பெரியார் நகர், அண்ணா நகர், சின்னக்கடை தெரு கட்டடத் தொழிலாளர்கள் குடியிருப்புப் பகுதி, கள் நகர், வேங்கிக்கால், திருவண்ணாமலை அருகில் உள்ள அய்யம்பாளையம், ராஜபாளையம், ஆடையூர், செங்கம் அருகிலுள்ள குளியம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏழைக் குடும்பங்களை கண்டறிந்து உதவிபுரிந்துள்ளார் ஆர்எஸ்எஸ்எஸ் நிறுவனத்தைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளரும், தொழிலதிபருமான தணிகைவேல்.
இந்தக் குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்குத் தேவையான அரிசி, மளிகைப் பொருள்கள் அனைத்தையும் வீடு வீடாகச் சென்று வழங்கவுள்ளனர். இந்தப் பொருள்களை வழங்குவதற்கு உதவியாக நீர்த்துளி இயக்கத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
முதல்கட்டமாக தற்போது 1,500 குடும்பங்களுக்கு இந்த இலவச நியாயவிலைக் கடை பொருள்களை லாரிகள் மூலம் கொண்டுவந்து அந்தந்தப் பகுதிகளில் விநியோகம் செய்யும் பணி நடைபெற்றது.
இதையும் படிங்க: தினக்கூலி தொழிலாளர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டிய சல்மான் கான்