செல்வராகவன்-சூர்யா இருவரும் முதல்முறையாக இணையும் படம் 'என்ஜிகே'. இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில், நடிகர் சூர்யா, இயக்குநர் செல்வராகவன், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நடிகை சாய் பல்லவி உட்பட பலர் பங்கேற்றனர்.
இதில், படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேசியதாவது,
என்ஜிகே படம் ஆரம்பித்த நாளில், இப்படம் மீதான எதிர்பார்ப்பு எந்த ஒரு நிலையிலும் குறைஞ்சதே இல்லை. இந்தப் படத்தை பத்தி அதிகமா பேசிய விஷயம் படம் எடுத்துக் கொண்ட காலம்தான். அதற்கு பல காரணங்கள் இருக்கு. கதை விவாதம் முடிந்து, பவுண்ட் ஸ்கிரிப்டை செல்வா சார் கொடுத்தார். அது எல்லோருக்குமே பிடித்திருந்தது. ஆனால், அப்போது அந்த லைனில் ஒரு படம் அப்போது வெளியாகி இருந்தது. அதனால், வேறொரு ஸ்கிரிப்ட் முடித்து, படம் ஷூட்டிங்குக்கு புறப்பட்ட நேரத்தில் தயாரிப்பாளர் சங்கம் ஸ்டிரைக் ஆரம்பித்தது. அப்போது என்னால் படம் தாமதமானது.
ஆர்டிஸ்ட்களிடம் வாங்கிய தேதிகளில் குழப்பம் ஏற்பட்டது. ஆனா எப்போது படம் ஷூட் ஆரம்பித்தாலும், படத்தில் கமிட்டான எந்தவொரு ஆர்டிஸ்ட்டும் விலகாம, என்ஜிகே படத்திற்காக முழு ஒத்துழைப்பு கொடுத்து நடித்து கொடுத்தாங்க. தேர்வு அறைக்கு முன்பாக கடைசியாக படிக்கும் மாணவர்கள் போல, படத்தின் ஸ்கிரிப்ட், டயலாக் போன்றவற்றை ஆர்வமுடன் படித்துக்கிட்டே இருப்பாங்க. எங்களிடம் கொடுத்த ஸ்கிரிப்டில் என்ன இருந்ததோ, அதை ஒரு பிரேம் மாறாமா எடுத்தார் செல்வா சார்.
ட்ரிம் வாரியர் பிக்சர்ஸுக்காக அண்ணா (சூர்யா) பண்ற முதல் படம். சரியாக நேரத்திற்கு, சரியான வகையில் கொண்டு வந்து சேர்க்கணும் என்று நினைத்தோம். படமும் நல்லா வந்திருக்கு. வெளியீடுக்கு நல்ல தேதியும் அமைஞ்சிருக்கு. அண்ணா ரசிகர்கள் எல்லாத்தையும் அடிச்சு காலி பண்ணுவாங்க. படம் குறித்த எந்தப் போட்டோ போட்டாலும் வைரலாக்குனாங்க. என்ஜிகே அப்டேட் என்பதுதான் ட்ரெண்டிங் டேக்லைனாக ஆக இருந்தது. ரசிகர்கள் ரொம்ப பொறுமையாக காத்திருந்தாங்க. அந்தக் காத்திருப்புக்கு நல்ல தீனியாக என்ஜிகே படம் நிச்சயமாக இருக்கும், என்றார்.