சென்னை: திரைப்படத் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் நடிகர் சிம்புவுக்கு எதிராக காவல் ஆணையரிடத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
அதில், "2016ஆம் ஆண்டு நடிகர் சிம்பு நடித்த 'அன்பானவன்' 'அசராதவன்' 'அடங்காதவன்' என்ற திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டேன். படத் தயாரிப்பின்போது 50 விழுக்காடு பணிகள் மட்டுமே முடிவடைந்த நிலையில் சிம்பு தன்னிடம், இத்துடன் இந்த படத்தை முடித்து வெளியிடுமாறு கேட்டுக் கொண்டார்.
ஒருவேளை திரைப்படம் நஷ்டம் அடைந்தால், தான் இலவசமாக ஒரு திரைப்படம் நடித்து தருவதாகவும் சிம்பு வாக்குறுதி அளித்தார். ஆனால், திரைப்படம் சரியாக ஓடாததால், கிட்டத்தட்ட 15 கோடி ரூபாய் வரை எனக்கு இழப்பு ஏற்பட்டது.
இது குறித்து சிம்புவிடம் கேட்டபோது, ஏற்கனவே சொன்னபடி திரைப்படம் எதுவும் நடித்து கொடுக்காமல், என்னை ஏமாற்றி வருகிறார். மேலும், இது தொடர்பாக திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்து, அந்த விசாரணையின் போது சிம்பு தனக்கு திரைப்படம் நடித்து தருவதாக ஒப்புக் கொண்டார். அதன் பின்னர் தன்னை ஏமாற்றி அலைகழித்து வருகிறார்.
சிம்புவின் இந்த நடவடிக்கையால் எனக்கு பெருத்த இழப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக சிம்பு, அவரது தந்தை, அவரது தாயார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தன்னுடைய புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் அளித்த புகார் மனுவின் நகல் கீழ்வருமாறு
இதையும் படிங்க: 'அவரது கருத்துகள் என்னை புண்படுத்தின' - நடிகர் விஜய்