தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வரும் 7ஆம் தேதி பொறுப்பேற்கிறார். இதனையொட்டி நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து ஓட்டளித்த அனைத்து தமிழ்நாடு மக்களுக்கும் நன்றிகள். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அரசுக்கும், முதலமைச்சர் வேட்பாளராக வெற்றி பெற்றிருக்கும் நண்பர் மு.க ஸ்டாலினுக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை மாநகர மேயராகப் பணியாற்றிய போது மிகச் சிறந்த நிர்வாகியைக் கண்டிருக்கிறோம். அதேபோல் புதிய மாற்றங்களைக் கொண்டு வரும் நிர்வாகத்தை தங்களின் தலைமையில் அமைய உள்ள அரசிடமிருந்து எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம். தந்தையின் வழியில் தமிழின் மேன்மைகளைப் பாதுகாத்து, தமிழ்நாடு உரிமைகளை மீட்டெடுத்து, தமிழையும் தமிழர்களையும் காக்க வேண்டிய பொறுப்பை முதன்மையானதாக எடுத்துக் கொள்ள தங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
திரைத்துறை சார்ந்த நலன்களை இன்னும் சிறப்பாக்குவீர்கள் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. மக்கள் எதிர்பார்த்த பெரிய ஒரு மாற்றத்தைத் தருவீர்கள் என்ற நம்பிக்கையும் உள்ளது. மக்களின் பக்கம் நின்று பார்க்கும் தன்மை உங்களுக்கு அதிகம் உண்டு என்பதால், நல்லாட்சியை எதிர்பார்த்து மனம் நிறை மகிழ்வுடன் எனது வாழ்த்துகளைத் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாகத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி, உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா” எனக் குறிப்பிட்டுள்ளார்.