ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஜெயம் ரவி நடித்துள்ள 'கோமாளி' திரைப்படம் நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படத்தை வெளியிட மாட்டோம் என ரெட் கார்ட் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் அரசு உடனடியாக தலையிட்டு ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் சங்க குழு உறுப்பினர்கள் அமைச்சர் கடம்பூர் ராஜுவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தயாரிப்பாளர் சதீஷ்குமார், திருச்சி வினியோகிஸ்தர்கள் புதிது புதிதாக முறைகளை மாற்றுகிறார்கள், பணம் தந்தால் தான் 'கோமாளி' படத்தை வெளியிடுவோம் என திருச்சி திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பிரச்சனை குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் தெரிவித்துள்ளோம் என்று தெரிவித்தார்.
மேலும், தமிழ் படங்களுக்கு ஒரு தேசிய விருதுகள் கூட கிடைக்கவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், இதில் அரசியல் தலையீடு இல்லை என்றும், தேசிய விருது தேர்ந்தெடுக்கும் குழுவில் தகுதியானவர்கள் இல்லை எனவும் அவர் குற்றம்சாட்டினார்.