கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி கலாட்டா டாட் காம் என்ற இணையதள ஊடகத்தில் ’திரௌபதி’ திரைப்படத்தின் இயக்குநர் மோகன்.ஜி என்பவரிடம் தொகுப்பாளர் விக்ரமன் நேர்காணல் நடத்தினார். அதில் திரைப்படம் குறித்து இயக்குநர் மோகனுக்கும் தொகுப்பாளர் விக்ரமனுக்கும் இடையே காரசார விவாதம் நடந்தது.
ஒருகட்டத்தில் தொகுப்பாளரின் கேள்விகளை எதிர்கொள்ள முடியாத மோகன் நிகழ்ச்சியின் பாதியிலேயே எழுந்து சென்றார். அதை அப்படியே அந்த ஊடகம் ஒளிபரப்பியது.
அதனைத் தொடர்ந்து இயக்குநர் மோகன்.ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், அடுத்த நாள் கலாட்டா டாட் காம் அலுவலகத்திற்குச் சென்று, நேர்காணலை முடித்துச் சென்ற காணொலியை ஒளிபரப்பாமல் பாதியிலேயே எழுந்து செல்வதை மட்டும் ஒளிபரப்பியது ஏன் எனக் கேள்வி எழுப்பிய காணொலியை பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், ’திரௌபதி’ திரைப்பட இயக்குநர் மோகன். ஜியின் ஆதரவாளர்கள் தினமும் தன்னை தொலைபேசியில் மிகவும் கீழ்த்தரமாகப் பேசுவதாகவும், தொடர்ந்து மிரட்டல்கள் விடுப்பதாகவும் காவல் ஆணையர் அலுவலகத்தில் தொகுப்பாளர் விக்ரமன் புகாரளித்துள்ளார்.
பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய விக்ரமன், மோகனின் ஆதரவாளர்கள் தன்னையும் தன் குடும்பத்தினரையும் மிரட்டுவதாகவும், சமூக வலைதளங்களில் தன் மீது அவதூறு பரப்புவதோடு, தன் சாதி குறித்து கேள்வி எழுப்பி தன்னை ஒரு அமைப்பின் பிரதிநிதியாக சித்திரிக்க முயல்வதாகவும் குற்றஞ்சாட்டினார்.
இதையும் படிங்க: காவல் ஆணையராக மாறிய நாஞ்சில் சம்பத் செய்யவிருக்கும் 'சம்பவம்'