சென்னை: தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட துல்கர் சல்மானிடம் மன்னிப்பு கோரி ட்விட்டரில் கருத்து தெரிவித்ததற்கு நடிகர் பிரசன்னாவை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
'வரனே அவஷ்யமுண்டு' படத்தில் இடம்பெறும் நாய்க்கு பிரபாகரன் பெயர் வைத்ததற்கு சர்ச்சை எழுந்த விவகாரத்தில், தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட துல்கர் சல்மானிடம், நடிகர் பிரசன்னா மன்னிப்பு கேட்டுள்ளார். இதுகுறித்து பிரசன்னா தனது ட்விட்டர் பதிவில்:
"ஆணியே புடுங்க வேணாம், என்ன கொடுமை சரவணா என்று நாம் பயன்படுத்தும் வசனங்களைப் போலத்தான் அவர்கள் ஊரில் இந்த வசனமும் பிரபலமானது. அந்தப் பெயருக்குப் பின்னால் இருக்கும் உணர்வுகள் என்ன என்பது எனக்குப் புரிகிறது. ஆனால் தவறான புரிதலின் அடிப்படையில் வெறுப்பைப் பரப்ப வேண்டாம்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், "மலையாள திரைப்படங்களைப் பார்த்திருக்கும் ஒரு தமிழனாக, அது எந்த அர்த்தத்தில் சொல்லப்பட்டது என்பது எனக்குப் புரிகிறது. தேவையில்லாத அவதூறுக்கும், தவறான புரிதலுக்கும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மலையாள இயக்குநர் அனுப் சத்யன் இயக்கத்தில் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘வரனே அவஷ்யமுண்டு’. இதில் துல்கர் சல்மானுடன், ஷோபனா, சுரேஷ் கோபி, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் கடந்த பிப்ரவரி மாதம் திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தை மலையாள இயக்குநர் அனுப் சத்யன் இயக்கியுள்ளார். தற்போது படமானது இணையதளத்திலும் வெளியாகியுள்ளது.
இதையடுத்து இப்படத்தில் நடிகர் சுரேஷ் கோபி வளர்க்கும் நாய்க்கு பிரபாகரன் பெயர் வைக்கப்பட்டிருந்தது. இது இணையதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து நடிகர் துல்கர் சல்மான் மற்றும் படக்குழுவினருக்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் .
இதேபோல் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர் துல்கர் சல்மான்ஐ விமர்சித்தும், படத்தில் இடம்பெற்ற காட்சிகளையும் அகற்றவேண்டும் எனவும், மன்னிப்பு கூற வேண்டும் என்று தெரிவித்தும் அறிக்கை வெளியிட்டிருந்தார் . இதைத்தொடர்ந்து தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கோரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை நடிகர் துல்கர் சல்மான் வெளியிட்டார்.
இதையடுத்து துல்கர் சல்மானிடம் மன்னிப்பு கேட்டு நடிகர் பிரசன்னா ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருப்பதால் நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.