‘பொன்மகள் வந்தாள்’ சர்ச்சை:
தொழில்நுட்ப வளர்ச்சியில் தமிழ் சினிமா பல்வேறு கட்டத்தைக் கடந்து டிஜிட்டல் உலகில் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டுள்ளது. ஆண்டுக்கு 10 படங்கள் வெளியாவதே கடினமாக இருந்தது அந்தக் காலம், தற்போது சரியான திரையரங்குகள் கிடைக்காத காரணத்தால் ஒரு ஆண்டுக்க்கு 50க்கும் மேற்பட்ட படங்கள் கிடப்பில் கிடக்கின்றன. தற்போது ஏற்பட்டுள்ள கரோனா சூழல், தமிழ்த் திரைப்படத் துறையினரை கடுமையாக பாதித்துள்ளது. இந்த வேளையில், ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் OTT-இல் வெளியாகும் என்ற தகவல் தமிழ்த் திரையுலகில் பேசு பொருளாக மாறியிருக்கிறது.
இயக்குநர் ப்ரெட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘பொன்மகள் வந்தாள்’. இதில் பார்த்திபன், பாக்கியராஜ், பாண்டியராஜன், பிரதாப் போத்தன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சூர்யா தனது 2டி என்டர்டெயின்மென்ட் மூலம் தயாரித்துள்ள இத்திரைப்படம் கடந்த மார்ச் 27ஆம் தேதி வெளியாகவிருந்தது. ஆனால் கரோனா சூழல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால், படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் நேரடியாக OTT-இல் வெளியாகவுள்ளது என தகவல் கசிந்தது. இதற்கு திரையரங்கு உரிமையாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து திரையரங்கு உரிமையாளர் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம், இனி ‘பொன்மகள் வந்தாள்’ தயாரிப்பாளரும் அவரை சார்ந்தோரும் தங்கள் படங்களை OTT-யிலேயே வெளியிட்டுக் கொள்ளட்டும் என கண்டனம் தெரிவித்தார். இதற்கு தயாரிப்பாளர் தரப்பு தங்கள் பக்க நியாயத்தை தெரிவித்துள்ளது.
தயாரிப்பாளர் சங்கத்தின் முடிவு
தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திரைப்பட தயாரிப்பு என்பது ரிஸ்க் அதிகமுள்ள ஒரு துறை. அதில் ஆர்வத்துடனும் நம்பிக்கையுடனும் இன்று நிறைய தயாரிப்பாளர்கள் திரைப்படம் எடுத்து வருகிறார்கள். அவர்களில் சிறிய மற்றும் மீடியம் பட்ஜெட் பட தயாரிப்பாளர்கள் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம். அவர்கள் ஒரு படத்தை எடுத்து முடித்தாலும், அப்படத்தை வெளியிட யாரும் முன்வருவதில்லை. அப்படியே வெளியிட்டாலும் அப்படங்களுக்கு திரையரங்கு மற்றும் ஷோ கிடைக்காமல் பல தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டு வந்துள்ளார்கள். இத்தகைய பிரச்னைகள் பெரிய நடிகர்கள்-இயக்குனர்கள் படங்களுக்கு அதிகம் இல்லை.
இன்றைய சூழ்நிலையில் தொழில்நுட்பம் வளர்ந்து OTT மூலம் புதிய படங்கள் நேரடியாக வெளிவரும் முறை உலகெங்கும் உள்ள நிலையில், தற்போது பிரபல OTT நிறுவனங்கள் சிறு மற்றும் மீடியம் பட்ஜெட் படங்களை வாங்கி, நேரடியாக வெளியிட முன்வந்திருப்பதை நாம் அனைவரும் வரவேற்க வேண்டும். இந்தி, தெலுங்கு மற்றும் பல மொழி திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள், இந்தக் கரோனா லாக்-டவுன் சூழ்நிலையில் தங்கள் முதலீட்டை எப்படியாவது எடுத்துவிட OTT நிறுவனங்கள் மூலம் முயற்சி செய்து வருகிறார்கள். இவ்வாறு படங்கள் நேரடியாக வெளியிடுவதன் மூலம் திரையரங்கில் வெளியாக காத்திருக்கும் படங்களின் எண்ணிக்கையும் குறையும். அவைகள் சரியான முறையில் வெளியாகவும் முடியும். இவ்வாறு பல நன்மைகள் விளையக்கூடிய இந்த OTT ப்ரீமியரை தமிழ் சினிமாவில் உள்ள நாம் அனைவரும் வரவேற்று, மேலும் இனி வரவிருக்கும் சூழ்நிலையில் ரிலீஸ் செய்ய சிரமமாகவுள்ள பல சிறிய மற்றும் மீடியம் பட்ஜெட் படங்களை OTT நிறுவனங்கள் பிரீமியர் செய்வதற்கு வாங்கக் கோர வேண்டும்.
மேலும் முதலீடு செய்யும் ஒரு தயாரிப்பாளருக்கு அப்படத்தை எல்லா விதங்களிலும் வியாபாரம் செய்ய அனைத்து உரிமையும் உள்ளது என்று தற்போது திரைப்படங்கள் எடுத்துவரும் தயாரிப்பாளர்களாகிய நாங்கள் தெரிவித்து கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளது.
திரைத்துறை ஊழியர்கள் ஒன்றிணைவதன் அவசியம்:
வட்டிக்கு பணம் வாங்கி படமெடுத்து, தோல்வியடைந்து கந்துவட்டிக்காரர்களின் மிரட்டலால் தற்கொலை செய்துகொண்ட தயாரிப்பாளர்கள் கதையும் இங்கே உண்டு. கரோனா சூழலில் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், ‘பொன்மகள் வந்தாள்’ படம் OTT-இல் வருவதற்கு கண்டனம் தெரிவித்திருப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என திரைத்துறை சார்ந்த பலரும் கருத்து தெரிவிக்கின்றன.
திரைப்படங்கள் நேரடியாக OTT-இல் வெளியிடப்படுவது, திரைப்பட வர்த்தகத்தை முழுவதுமாக ஆன்லைன் பக்கம் திருப்பிவிடுமோ என்ற அச்சம் திரையரங்கை நம்பியிருப்பவர்களுக்கு இருக்கிறது. ஆனால் அதற்கான சாத்தியக்கூறு இந்தியாவில் கிடையாது. பெரிய நடிகர்களின் படங்கள் வருடம் முழுவதும் திரையரங்குகளை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. இதனால் ஆன்லைன் வெளியீடு என்பது சிறு மற்றும் மீடியம் பட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கு உதவியாக இருக்கும். வீட்டில் அமர்ந்து படத்தைப் பார்ப்பவர்களை விட திரையரங்கில் கொண்டாட்ட மனநிலையுடன் பார்ப்பதை விரும்புபவர்கள் இங்கே அதிகம். ஆனால் இங்கு பெரும்பான்மையான திரையரங்குகளை கார்ப்பரேட் நிறுவனங்கள் கைப்பற்றியுள்ள நிலையில், மிஞ்சியிருக்கும் திரையரங்கு உரிமையாளர்கள் அச்சப்படுவதிலும் தவறில்லை.
இந்தக் கரோனா சூழல் முடிந்து பழைய நிலை திரும்புவதற்குள் தமிழ் சினிமா பெரிய அளவில் பாதிக்கப்படும். இந்த வேளையில் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் ஒன்றிணைந்து ஒருவருக்கொருவர் ஆதரவாக செயல்பட வேண்டும் என்பதே தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கோரிக்கையாக உள்ளது.