இதுகுறித்து அவர், 'பொன்மகள் வந்தாள்' திரைப்படத்தை அமேசான் பிரைம் வெளியிடுவது தமிழ் திரையுலகில் மிகப் பெரிய பிரச்சனையை சந்தித்துள்ளது. என்னுடைய தரப்பில் இப்பொழுது நிலவும் இந்த சூழலில் அந்தப் படத்தை அமேசான் ப்ரைமுக்கு கொடுத்தது தவறில்லை. ஏனென்றால், இந்தப் படம் கடந்த மார்ச் மாதம் வெளியாக இருந்தது. சரியான நேரத்தில் வெளியாகியிருந்தால் இப்போது ஓடிடி தளத்திற்கு வந்திருக்கும்.
கரோனா ஊரடங்கு உத்தரவால் ஏற்கனவே பாதிப்புகளை சந்தித்துள்ள இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம், மேலும் காலதாமதமானால் இன்னும் இழப்புகளை சந்திக்க நேரிடும். அதன் காரணமாகத்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக நாங்கள் நினைக்கிறோம். கற்பனைக்கு ஒரு அளவில்லாமல் பல கோடிகளுக்கு விற்பனை ஆகிறது என்று கூறுகிறார்கள். ஆனால், ஒரு சில கோடிகளுக்குதான் இது விற்பனையாகி இருக்கும்.
திரையரங்கு உரிமையாளர் நண்பர்களுக்கு நான் ஒன்று கூறிக்கொள்ள விரும்புகிறேன். திரையரங்குக்கு என்றுமே அழிவில்லை. டிவி புழக்கத்திற்கு வந்த பொழுது சினிமா அழிந்துவிடும் என்று கூறினார்கள். அதன்பிறகு டிவிடி, சிடி என அனைத்தும் வந்தது. இன்று ரிலீஸ் ஆகும் படம் உடனடியாக இணையதளத்தில் வெளியாகி வருகிறது. இந்த சூழ்நிலையிலும் சினிமா அழிந்துவிட்டதா? இல்லை . அமேசான் ஆண்டுக்கு ஒரு பத்து பன்னிரண்டு படங்களைதான் வாங்குவார்கள், அதையும் நாம் ஏன் தடுக்க வேண்டும், இதனை வரவேற்போம்.
தற்போது திரையுலகம் மிகப் பெரிய சிக்கலில் உள்ளது. ஊரடங்கு உத்தரவு இன்னும் நீண்டு கொண்டே இருப்பதால், பல படங்கள் முடியும் தருவாயிலும் சிக்கல்களை சந்தித்துவருகின்றன. இதனால், ஏராளமான முதலீடுகளுக்கான வட்டி பிரச்னைகள் உள்ளன. ஆகையால் இந்த ஓடிடியில் ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் வெளியாவதற்கு நாம் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அது மட்டுமல்லாமல், இந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனம் சமூக அக்கறையோடு சேவை செய்து வருகிறது. கல்வி நிறுவனங்களுக்கு உதவி செய்கிறது, இந்தப் பணம் அவர்களுக்கு உதவியாக இருக்கும். இனி வரும் காலங்களில் நாம் அனைவரும் ஒன்றுகூடி அமர்ந்து இந்தப் பிரச்னைக்கு நல்ல முடிவுகளை எடுப்போம் என தெரிவித்தார்.