கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் குமார். இவருடைய மனைவி செல்வகுமாரி நேற்று(ஜூலை.10) மணவாளக்குறிச்சியிலுள்ள தனது அம்மா வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றார்.
அப்போது சேரமங்கலம் பகுதி நோக்கிச் சென்று கொண்டு இருந்தபோது, பின்னாள் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் செல்வகுமாரி கழுத்தில் கிடந்த ஏழு பவுன் தங்க சங்கிலியைப் பறித்துள்ளார்.
இதில் கொள்ளையனுடன் போராடியதில் நான்கு பவுன் தங்கசங்கிலி கையோடு கிடைக்க, மீதிமுள்ள மூன்று பவுனுடன் கொள்ளையன் தப்பி ஓடியுள்ளார். இதுகுறித்து செல்வகுமாரி, மணவாளக்குறிச்சி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அப்புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் குலசேகரம் பகுதியைச் சேர்ந்த விஜின் என்னும் இளைஞர், இந்தத் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து குலசேகரம் காவஸ்தலம் பகுதியில் தனிப்படை காவல்துறையினர் சினிமா பாணியில் அவரை துரத்தி பிடித்தனர். இதனால் சம்பவ இடத்தில் கூடிய பொதுமக்கள் மாறுவேடத்தில் இருந்த தனிப்படை காவலர்களை முற்றுகையிட்டனர்.
பின்னர் சம்பவ இடத்திற்குச் சென்ற குலசேகரம் காவல்துறையினர் மற்றும் தனிப்படை காவலர்கள் கொள்ளையனை குலசேகரம் காவல்நிலையத்திற்குக் கொண்டு சென்று, பின்பு மேல் விசாரணைக்காக தக்கலை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.