தமிழில் விஜய் நடித்த ‘தமிழன்’ திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. அதன்பிறகு பாலிவுட் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்துவந்த அவருக்கு, ஹாலிவுட் சீரிஸ் மற்றும் திரைப்பட வாய்ப்புகள் அமைந்தன. தற்போது புதிய ஹாலிவுட் திரைப்படம் ஒன்றில் அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ஜிம் ஸ்ட்ரோஸ் இயக்கத்தில் பிரியங்கா சோப்ரா, சாம் ஹுயூகன், கிராமி விருது பெற்ற பாடகி செலைன் டியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் இப்படத்தில் நடிக்கின்றனர். இது எஸ்எம்எஸ் ஃபர் டிச் எனும் ஜெர்மானிய திரைப்படத்தின் ரீமேக் என தகவல் வெளியாகியுள்ளது. சோபி கிராமர்ஸ் நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட இத்திரைப்படம் சினிமா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
காதலனை இழந்த பெண் ஒருத்தி, காதலனின் பழைய மொபைல் நம்பருக்கு தொடர்ந்து மெசேஜ் செய்கிறார்கள். இதன்மூலம் வேறு நபருடன் அவளுக்கு பழக்கம் ஏற்படுகிறது. செலைன் டியனின் பாடல் இவர்களை ஒன்றிணைந்து மீண்டும் காதலில் விழத் தூண்டும்படி கதை நகர்கிறது. இதுதான் படத்தின் ஒன்லைன்..
இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரியங்கா, இந்த அருமையான திரைப்படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பது ஊக்கமளிக்கிறது. ஜிம் ஸ்ட்ரோஸ், சாம் ஹுயூகன், செலைன் டியன் ஆகியோருடன் பணிபுரிவதை கௌரவமாக கருதுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.