கார்த்தியும் மகாலட்சுமியும் ஒரே பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கிறார்கள். கார்த்திக்கிற்கு மகாவை பார்த்தவுடனே பிடித்துவிட்டது. இருவரும் காதலிக்கிறார்கள். இவர்களின் காதல் இருவீட்டாருக்கும் தெரிந்து இருவரையும் கண்டிக்கிறார்கள்.
இதனால் மனமுடைந்த இருவரும் தற்கொலைக்கு முயல்கிறார்கள். ஆனால் இருவரும் காப்பாற்றப்பட உடனே இருவரது பெற்றோரும் ஒரு முடிவெடுத்து நன்றாகப் படித்து சமூகத்தில் இருவரும் நல்ல நிலைமைக்கு வந்ததும் உங்களுக்குத் திருமணம் செய்துவைப்பதாக கூறுகிறார்கள்.
மகா படித்து டாக்டராக... கார்த்தியோ குடித்துவிட்டு ரவுடித்தனம் செய்துகொண்டிருக்கிறார். கார்த்தி இப்படி குடித்துவிட்டு ரவுடியாக மாற என்ன காரணம்? இறுதியில் இருவரும் இணைந்தார்களா? என்பதை காதல் கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குநர் ராம்தேவ்.
படத்தை தயாரித்து இயக்கியும் உள்ளார் ராம்தேவ். கார்த்தியாக மீரான், மகாலட்சுமியாக மேகனா என இருவரும் புதுமுகமாக இருந்தாலும் நன்றாகவே நடித்துள்ளனர். இவர்களது பெற்றோர்களாக வரும் வின்சென்ட்ராய், சுஜாதா, சிவக்குமார், சாய்ராதிகா தங்களது பணியைத் திறம்படச் செய்துள்ளனர்.
கார்த்தியின் நண்பராக வரும் இயக்குநரும் நடிகருமான ஶ்ரீநாத் திரைக்கதையின் முடிச்சுக்கு உதவியுள்ளார். இவர்களுடன் நெல்லை சிவா, மங்கி ரவி, செல்வராஜ், கவுதமி, முகேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர். நாட்டுப்புற பாடகர் செந்தில்கணேஷ் ஒரு பாடல் பாடியது மட்டுமல்லாமல் நடனமாடியும் உள்ளார். மணிவண்ணன், பிலிப் விஜயகுமாரின் ஒளிப்பதிவில் குறையில்லை.
இந்தப் படத்திற்கு ஜான் A. அலெக்ஸ், ரூபேஷ், ஷேக் மீரா ஆகிய மூன்று பேர் இசையமைத்துள்ளனர். கபிலன் எழுதிய பழகிய பறவை பாடல் நன்றாகவே உள்ளது. ஷேக்மீராவின் பின்னணி இசை படத்திற்கு அழகு சேர்த்துள்ளது. துர்காஷின் எடிட்டிங் குறை சொல்லும் அளவிற்கு இல்லை.
காதலில் தோல்வி என்றாலே உயிரிழப்பது இல்லையென்றால் கொலைசெய்வது, திராவகம் ஊற்றுவது போன்றவை மட்டும் தீர்வாகாது. அதனையும் கடந்து வாழ்ந்து காட்டி காதலில் வெற்றிபெற வேண்டும் என்ற கருத்தைப் பதிவுசெய்துள்ளார் இயக்குநர் ராம்தேவ்.