தெலுங்கு பவர் ஸ்டார் பவன் கல்யாண் தற்போது 'பிங்' படத்தின் தெலுங்கு ரீமேக்கான 'லாயர் சாப்' படத்தில் நடித்துவருகிறார். பாலிவுட்டில் 'பிங்' மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் நடிப்பிலும், தமிழில் 'நேர்கொண்ட பார்வை' அஜித் நடிப்பிலும் வெளியாகி வசூல் சாதனை படைத்தன.
தற்போது இப்படம் தெலுங்கில் படமாக்கப்பட்டுவருகிறது. இதில், நிவேதா தாமஸ், அஞ்சலி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். வேணு ஸ்ரீராம் இப்படத்தை இயக்குகிறார். மேலும், 'நேர்கொண்ட பார்வை' படத்தைத் தொடர்ந்து இப்படத்தையும் போனி கபூர், தில் ராஜுவுடன் இணைந்து தயாரிக்கிறார்.
இதனிடையே சிம்புவின் 'வானம்', பாலகிருஷ்ணாவின் என்டிஆர் உள்ளிட்ட படங்களை இயக்கிய கிரிஷ்ஷுடன் பவர் ஸ்டார் பவன் கல்யாண் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.
தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் மெகா பட்ஜெட்டில் உருவாக இருக்கும் புதிய பீரியட் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை இயக்குநர் கிரிஷ் நேற்று ஹைதராபாத்தில் வெளியிட்டார்.
இந்தப்படத்தை எம்.எம். ரத்னம் தயாரிக்கவுள்ளார். எம்.எம். கீரவாணி இசையமைக்கவுள்ளார். இதில் நடிக்க இருக்கும் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட கூடுதல் விவரம் அடுத்தக்கட்ட அறிவிப்பில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
இதற்கான முதல்கட்டப்பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் தென்னிந்திய நடிகர்கள், நடிகைகள் இப்படத்தில் நடிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.
அரசியல் பணிகள் காரணமாக படங்களில் நடிப்பதைத் தற்காலிகமாக நிறுத்தியிருந்த பவன் கல்யாண் மீண்டும் தெலுங்கு திரையுலகில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார். ஜன சேனா கட்சியை நடத்திவரும் பவன் கல்யாண் சமீபத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைத்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அறுவை சிகிச்சை முடிந்து மீண்டும் இந்தியன் 2 படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் கமல்!