மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தை ஏ.எல். விஜய் இயக்கிவருகிறார். இந்தப் படத்தில் ஜெயலலிதாவாக பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்தும், எம்ஜிஆராக அரவிந்த் சுவாமியும் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தை ஷைலேஷ். ஆர். சிங், விஷ்ணுவர்தன் இந்தூரி ஆகியோர் தயாரிக்கின்றனர். தமிழில் 'தலைவி' என்ற பெயரிலும், இந்தியில் ஜெயா என்ற பெயரிலும் இப்படம் உருவாகிவருகிறது. வரும் ஜூன் மாதம் 26ஆம் தேதி இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ள நிலையில், எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு அரவிந்த் சுவாமியின் புகைப்படங்களை சமீபத்தில் வெளியிட்டிருந்தது.
எம்ஜிஆர் போன்ற தோற்றத்தில் அரவிந்த் சுவாமியின் இளமையான புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து இணையத்தை ஆக்கிரமித்தன. படத்தின் டீசருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்தப் புகைப்படங்களில் எம்ஜிஆரை கண்முன்னே நிறுத்தும்வகையில் அரவிந்த் சுவாமியின் தோற்றம் அச்சு அசலாக இருந்தாக ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்து படக்குழுவுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
இந்தப் படத்தில் அரவிந்த் சுவாமியை எம்ஜிஆராக மாற்றி நிறுத்தியவர் பிரபல மேக்கப் ஆர்ட்டிஸ்ட் பட்டணம் ரஷீத் என்பவர்தான். தலைமுடி முதல் அங்குலம் அங்குலமாகப் பார்த்துப் பார்த்து அரவிந்த் சுவாமியை அப்படியே மாற்றி நிறுத்தியிருக்கிறார் ரஷீத். ஒரு மேக்கப் ஆர்டிஸ்டாக தனது பணியை நிறைவாகச் செய்திருக்கும் அவர், எம்ஜிஆரை அப்படியே உள்வாங்கி தனது கலைத்திறனை அரவிந்த் சுவாமி மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்.
சுமார் எட்டு முறை இதற்கான ஒப்பனை வடிவத்தை செய்துபார்த்து படக்குழு திருப்தி அடையும்வரை அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார் ரஷீத். எம்ஜிஆரின் முழுமையான தோற்றத்தை வடிவமைத்த பிறகு படக்குழுவினர் ஆச்சரியத்துடன் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் பட்டணம் ரஷீத்தை பாராட்டியுள்ளனர். சிறந்த மேக்கப் ஆர்டிஸ்டுக்கான விருதுகள் பலவற்றையும் இவர் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
புகழ்பெற்ற கவிஞரான தனது தந்தையின் நினைவுகளைப் பகிர்ந்த அமிதாப்!