தமிழ் சினிமாவில் எப்போதும் வித்தியாச முயற்சி செய்து படத்தை இயக்குபவர் பார்த்திபன். இதன் ஒரு முயற்சியாக தற்போது பார்த்திபன், எழுதி இயக்கி தயாரிப்பு மட்டுமல்லாது, படம் முழுவதும் தனி ஆளாக நடித்திருக்கும் படம் 'ஒத்த செருப்பு'. இப்படத்தில் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே முழுபடத்திலும் வரும் படி உருவாகி உள்ளது.
ஆஸ்கார் நாயகன் ரசூல் பூக்குட்டி ஒலிக்கலவை செய்துள்ள இப்படத்துக்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். சந்தோஷ் நாரயணன் இசையமைத்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
ஆனால் படம் வெளியாகும் முன்பே உலக சாதனை படைத்துள்ளது. 'லிம்கா புக் ஆஃப் ரெக்கார்டுஸ் ஆசியா ( Limca book of records Asia)', 'இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டுஸ் (India book of records)' தனி நபர் திரைப்பட முயற்சியில் தேர்வு பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த விருது இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்யராஜ், சமுத்திரகனி, சாமி ஆகியோர் முன்னிலயில் வழங்கப்பட்டது.
பார்த்திபனின் 'புதிய பாதை'யில் இருந்து 'ஒத்த செருப்பு' வரை புது முயற்சிகளால் தமிழ் சினிமாவை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்பவர் என்றால் மிகையாகாது.