ஹாலிவுட் திருவிழாவாகப் பார்க்கப்படும், 92ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இந்திய நேரப்படி இன்று காலை நடைபெற்றது. 24 பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்பட்டாலும், சிறந்த திரைப்படத்திற்கான பிரிவில் வழங்கப்படும் ஆஸ்கார் விருதுக்கே, ரசிகர்களின் மத்தியில் அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும்.
இம்முறை, 1917, ஜோக்கர், ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட், த ஐரிஷ்மேன் உள்ளிட்ட ஆங்கிலத் திரைப்படங்களுடன் தென் கொரியாவின் 'பாராஸைட்' திரைப்படமும் சிறந்த திரைப்படத்திற்கான பிரிவில் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. ப்ளாக் காமெடியுடன் கூடிய த்ரில்லர் ஜானரைச் சேர்ந்த பாராஸைட் திரைப்படம், இவ்விருதில் பரிந்துரைக்கப்பட்ட மற்ற அமெரிக்கத் திரைப்படங்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளி சிறந்த திரைப்படத்திற்கான விருதைத் தட்டிச் சென்றுள்ளது.
மேலும் 92 வருட ஆஸ்கர் வரலாற்றில் ஆங்கில மொழியில் எடுக்கப்பட்டத் திரைப்படங்களே சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றுவந்த மரபையும் பாராஸைட் திரைப்படம் உடைத்துள்ளது. இயக்குநர் போங் ஜோன் ஹோ இயக்கியுள்ள இந்தத் திரைப்படம், சிறந்த திரைப்படத்திற்காக மட்டுமின்றி, சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை, சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம் ஆகிய நான்கு பிரிவுகளிலும் ஆஸ்கர் விருதுகளை குவித்து சாதனைப் படைத்துள்ளது.
இதையும் படிங்க: ஆஸ்கர் விருதுகள் 2020 - வெற்றியாளர்கள் பட்டியல்