ஒடுக்கப்பட்டவர்களின் அரசியலை தொடர்ந்து தான் இயக்கும் படத்தின் மூலமும் தயாரிக்கும் படத்தின் மூலமும் உரக்க பேசி வருபவர் இயக்குநர் பா.ரஞ்சித்.
இவர் முன்னதாக இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக இருந்தார். பின்னர் தினேஷ் நடித்த 'அட்டக்கத்தி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார்.
காதல் கதையாக இருந்தாலும் அதிலும் ஒடுக்கப்பட்டோருக்கான உரிமையை பேசியவர். அதனைத் தொடர்ந்து இயக்கிய 'மெட்ராஸ்' படத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அரசியலை பேசி அடுத்த பாய்ச்சலை நகர்த்தினார்.
இந்தப் படம் இவருக்கு ரஜினியை வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. ரஜினியை வைத்து 'கபாலி', 'காலா' என அடுத்தடுத்து இரண்டு படங்களை இயக்கி ரஜினியை வைத்தே ஒடுக்கப்பட்டோருக்கான அரசியலை பேசினார். மேலும் நீண்ட வருடங்களுக்கு பிறகு ரஜினிக்குள் இருந்த சிறந்த நடிகனையும் வெளிக்கொண்டுவந்தார்.
இயக்குவது மட்டுமில்லாமல் 'பரியேறும் பெருமாள்' படத்தில் தனது நிறுவமான நீலம் புரொடக்ஷன் மூலம் தயாரிப்பாளராக களமிறங்கினார்.
'பரியேறும் பெருமாள்', 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் உலக அமைதி தான் நினைத்த தாழ்த்தப்பட்டோர் மீதான அரசியலை உரக்க பேசிவந்தார்.
இப்படி தமிழ் சினிமாவில் மாற்றுச் சிந்தனையை விதைத்த பா.ரஞ்சித்துக்கு இன்று 38ஆவது பிறந்தநாள். இவரது பிறந்தநாளுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன், வெங்கட் பிரபு உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தற்போது பா.ரஞ்சித் வடசென்னையில் பாரம்பரிய குத்துச்சண்டையை மையமாக வைத்து 'சார்பட்டா' என்ற திரைப்படத்தை எடுத்து வருகிறார்.