ஹாலிவுட் சினிமாவில், மிக உயரிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்படுவது ஆஸ்கர். ஆண்டுதோறும், ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா பிப்ரவரி மாதம் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறுவது வழக்கம்.
ஆனால் இம்முறை கரோனா வைரஸ் காரணமாக 2021ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா பிப்ரவரி மாதத்துக்குப் பதிலாக, ஏப்ரல் 25ஆம் தேதி நடைபெறும் என ஆஸ்கர் குழு தெரிவித்துள்ளது. அதேபோல் இம்முறை காணொலி வாயிலாக விருதுகள் வழங்கும் விழா நடைபெறும் என்று தகவல் வெளியானது.
இந்நிலையில் 93ஆவது ஆஸ்கர் விருது விழா காணொலி வாயிலாக நடைபெறாது என்று ஆஸ்கர் குழு மறுப்புத் தெரிவித்துள்ளது. இது குறித்து ஆஸ்கர் குழுவின் பிரதிநிதி கூறுகையில், “அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 93ஆவது ஆஸ்கர் விருது விழா வழக்கம்போல் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி திரையரங்கத்தில் நடைபெறும்.
அதேபோல் வெற்றிபெற்றவர்கள் வழக்கம்போல் மேடையில் விருதுகளைப் பெற்றுக்கொள்வார்கள். நிகழ்ச்சியில் எத்தனை நபர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்ற விவரம் பின்னர் அறிவிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மஹத்துடன் ப்ளாக் ஸ்பாரோவாக கலக்கும் யோகிபாபு!