வாஷிங்டன்: 92ஆவது ஆஸ்கர் விருதை வழங்க இருக்கும் நான்கு முன்னாள் ஆஸ்கர் வெற்றியாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
2020ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா பிப்ரவரி மாதம் 9ஆம் தேதி நடைபெறவுள்ளது. 92ஆவது ஆஸ்கர் விருது விழாவான இந்த நிகழ்ச்சி கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டில் தொகுப்பாளர் இல்லாமல் நடத்தப்பட உள்ளது.
இதுதொடர்பாக கடந்த வாரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்த தற்போது நடிப்புக்கான பிரிவுகளில் வெற்றி பெறும் வெற்றியாளர்களுக்கு விருதுகளை வழங்க இருக்கும் நபர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, கடந்த ஆண்டு ஆஸ்கர் விருதை வென்ற நடிகர்களான ரெஜினா கிங், ராமி மாலேக், ஒலிவியா கோல்மேன், மகர்ஷாலா அலி ஆகியோரின் பெயர்கள் இடம்பிடித்துள்ளது.
சிறந்த பெண் துணை நடிகர்களுக்கான விருதை கிங் மற்றும் அலி பெற்றனர். சிறந்த நடிகைகான விருதை தி ஃபேவரைட் படத்துக்காக கோல்மேன் வென்றார்.
இதேபோல் சிறந்த நடிகருக்கான விருதை போஹேமியன் ராப்சோடி படத்துக்காக மாலேக் வென்றார்.
இவர்கள் நான்கு பேரும், 2020ஆம் ஆண்டு நடிப்புக்கான பிரிவில் ஆஸ்கர் விருதை வெல்லப்போகும் நடிகர்களுக்கு விருதுகளை வழங்கவுள்ளனர்.
இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதில் உலக அளவில் சூப்பர்ஹிட்டான ஜோக்கர் திரைப்படம் 11 பிரிவுகளில் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.