ஹாலிவுட் திரைப்படங்களில் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரம் வரிசையில் வரும் திரைப்படங்களுக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பும் வரவேற்பும் உள்ளது. சமீபகாலமாக ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் ஹாலிவுட் நடிகரான டேனியல் கிரேய்க் நடித்து வருகிறார். இதுவரை ஜேம்ஸ் பாண்ட் படவரிசையில் 24 படங்கள் வந்துள்ளன. கடைசியாக 2015ஆம் ஆண்டு டேனியல் கிரேய்க் நடிப்பில் ‘ஸ்பெக்டர்’ என்ற பெயரில் ஜேம்ஸ் பாண்ட் படம் வெளிவந்தது.
இந்நிலையில், ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தின் 25ஆவது திரைப்படம் 'பாண்ட் 25' என்ற பெயரில் வெளியாகவுள்ளது. 2020ஆம் ஆண்டு வெளிவரவுள்ள இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் உள்ள பைன்வுட் ஸ்டுடியோஸ் என்ற இடத்தில் நடைபெற்று வருகிறது. இதற்காக பிரமாண்டமான செட்கள் அங்கு அமைக்கப்பட்டுள்ள நிலையில், படப்பிடிப்பு தளத்தில் சிறியளவிலான வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அப்படக்குழுவினர் ட்விட்டர் பக்கத்தில், பெரிய அளவிலான சேதம் எதுவும் ஏற்படவில்லை, செட் போடப்பட்ட இடத்திலிருந்த மேடையில் நின்று கொண்டிருந்த ஒரு நபர் மட்டும் காயமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
கடந்த மே மாதம் இப்படத்தின் நாயகன் டேனியல் கிரேய்குக்கு ஏற்பட்ட விபத்தின் காரணமாக முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சைக்குப்பின் தேறிவரும் அவர், படப்படிப்பில் விரைவில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படக்குழுவினருக்கு ஏற்பட்டுள்ள இந்த திடீர் விபத்து மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.