சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் 2016ஆம் ஆண்டு நடந்த சுவாதி கொலை வழக்கை அடிப்படையாக வைத்து ‘சுவாதி கொலை வழக்கு’ என்ற பெயரில் இயக்குநர் ரமேஷ் செல்வன் படத்தை தயாரித்து இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் சுவாதியாக நடிகை ஐராவும், ராம்குமாராக புதுமுகம் மனோவும் நடித்தனர். கதாபாத்திரங்கள் பெயர்களும் சுவாதி, ராம்குமார் என்று வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் படத்தின் டீசர் வெளியானதையடுத்து பல்வேறு தரப்பிலிருந்து படத்திற்கு எதிர்ப்புக் கிளம்பியது. சுவாதியின் தந்தை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இதன்காரணமாக படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு, படத்தின் தலைப்பும் 'நுங்கம்பாக்கம்' என்று மாற்றப்பட்டது. தணிக்கைக் குழுவினர் படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் அளித்தனர்.
தற்பொழுது இந்தப் படம் அக்டோபர் 24ஆம் தேதி சினிப்பிலிஸ் என்ற ஓடிடியில் வெளியாக உள்ளதாக படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான ரமேஷ் செல்வன் தெரிவித்துள்ளார்
ரமேஷ் செல்வன், அப்படத்தின் கதாநாயகி உள்ளிட்ட படக்குழுவினர் சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்,
அப்போது பேசிய ரமேஷ் செல்வன், "சுவாதியின் தந்தை என் மீது வழக்குப்பதிவு செய்தார். வழக்குப்பதிவு செய்ததால் நான் பெங்களூருக்கு சென்றுவிட்டேன், பிறகு ஜாமீன் பெற்று சென்னை திரும்பினேன். பிறகு சென்சார் போர்டு இந்த படத்தை அனுப்பினேன், நிராகரித்தார்கள்.
அதன்பிறகு, மீண்டும் சில காட்சிகளை நீக்கி சென்சார் போர்டுக்கு கொடுத்தேன்.
இன்னொரு தரப்பு படம் வெளியாகக் கூடாது என முறையிட்டனர். நான் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவனிடம் படத்தை திரையிட்டு காண்பித்தேன்.
அவர் திரைப்படம் அருமையாக உள்ளது என்றார். பிறகு அந்தப் பிரச்னை தீர்த்தது. அடுத்து அடுத்து பல பிரச்னைகளை கடந்தேன். இந்தப் படம் இரண்டரை ஆண்டுகள் கழித்து வருகிற 24 ஆம் தேதி சினிப்பிலிஸ் என்ற ஓடிடி வலைத்தளத்தில் வெளியாகிறது.
ரூ.77 செலுத்தினால் இந்த ஓடிடி தளம் சேனலாக அனைத்து தொலைக்காட்சிகளிலும் வரும். இப்படம் 1:55 மணி நீளம் உடையது. ரூ. 2.15 கோடி பட்ஜெட். அதற்கு மேல் லாபம் கிடைக்கும் என நம்புகிறோம்” எனத் தெரிவித்தார்.