மும்பை: மாடலும், நடிகையுமான நோரா ஃபதேஹி அரசு மருத்துவமனைகளுக்கு பிபிஇ (தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணம்) கிட்களை வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக நோரா ஃபதேஹி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
அனைவருக்கும் வணக்கம். உலகலாவிய தொற்று நோயை எதிர்த்து உலகமே போராடி வரும் கடிமான சூழ்நிலையில் இருக்கிறோம். இதிலிருந்து தற்காத்துக்கொள்ளும் விதமாக நம்மை நாமே தனிமைப்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு பெற்றவர்களாக இருக்கிறோம். ஆனால் இதிலும் சிலர் நாள்தோறும் வீட்டை விட்டு வெளியேறி கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக போராடி வருகிறார்கள். அவர்கள் வேறு யாருமில்லை மருத்துவ பணியாளர்கள் என்பதை அனைவரும் அறிவோம்.
கரோனா தொற்று இருப்பவர்களை நேரடி தொடர்பில் இருந்தவாறு, அவர்களுக்கு வேண்டிய சிகிச்சைகளை அவர்கள் தொய்வில்லாமல் செய்கிறார்கள். எனவே, மருத்துவ பணியாளர்களின் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமானது. மருத்துவமனையில் பணியின்போது அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் எதிர்பாராத விதமாக மிகவும் குறைவாகவே உள்ளன. அந்த வகையில் பிபிஇ கிட் எனப்படும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் பெறுவதற்கு அவர்கள் மிகவும் தகுதியானவர்கள். இதை கருத்தில் கொண்டு இந்தியா முழுவதும் இருக்கும் பல்வேறு அரசு மருத்துமனைக்கு பிபிஇ கிட்களை தனிப்பட்ட முறையில் வழங்கியுள்ளேன்.
இவை அனைத்தும் முற்றிலும் வெளிப்படையான ரீதியில் வழங்கப்படுகின்றன. இவ்வாறு அவர் வீடியோவில் கூறியுள்ளார்.
கனடாவை சேர்ந்த மாடலான நோரா ஃபதேஹி, இந்தி படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கு, மலையாளம் மொழி படங்களிலும் பாடலுக்கு நடனமாடியுள்ளார். பாகுபாலி படத்தில் இடம்பெறும் புகழ்பெற்ற பாடலான மனோகரி பாடலில் தோன்றிய மூன்று பெண்களில் ஒருவர்தான் இந்த நோரா ஃபதேஹி.