91ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் பெண்கள், சிறுபான்மையினர் உள்ளிட்டவர்களுக்கு அதிகமாக விருதுகள் வழங்கப்பட்டது. இது ஆஸ்கர் வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாக காணப்பட்டது. ஆனால் இந்த முறை ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரையில் பெரும்பாலும் வெள்ளை நிறத்தினரே உள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற பிரிட்டிஷ் அகாடெமி ஆஃப் ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் ஆர்ட்ஸ் எனப்படும் பிரபல பாஃப்டா விருது விழாவில் 'ஜோக்கர்' திரைப்பட நடிகர் வாகின் பீனிக்ஸ் ஆஸ்கர் விருதின் பரிந்துரை பட்டியலில் பெரும்பாலும் வெள்ளையர்களே இருப்பதாக கூறியிருந்தார்.
இந்த ஆண்டு ஆஸ்கார் விருதின் முக்கிய பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட 20 நடிகர்களில் பெரும்பாலனோர் வெள்ளையர்களாக இருக்கின்றனர். இதனால் இதில் நிற வேற்றுமை காட்டப்பட்டுள்ளதாக ஆஸ்கர் பரிந்துரை பட்டியல் வெளியானதில் இருந்தே ஊடகங்கள் கூறிவருகின்றன.
இந்தாண்டு கோல்டன் குளோப்பல் விருதில் சிறந்த துணை நடிகைக்கான விருது பெற்ற ஆசிய வம்சாவளியைச் சேர்ந்த நடிகை அவ்க்வாஃபினாவின் பெயர் ஆஸ்கர் பரிந்துரை பட்டியில் இடம்பெறவில்லை.
அதே போல் 'ஹஸ்ட்லர்ஸ்' படத்தில் நடித்தன் மூலம் உலக சினிமா ரசிகர்களை கவர்ந்த நடிகை ஜெனிஃபர் லோபஸூம் பரிந்துரை பட்டியலில் இடம்பெறவில்லை. இப்படி பல கலைஞர்களை இந்த வருட ஆஸ்கர் விருதின் பரிந்துரை பட்டியலில் இடம்பெறாதது சினிமா ரசிகர்களிடையே பெரும் விவதாத பேச்சாக மாறியுள்ளது.
இதற்கிடையில் இந்த வருட ஆஸ்கர் விருது ஹோஸ்டர்ஸ் (தொகுப்பாளர்கள்) இல்லாமல் நடக்கபோவதாக ஏபிசி என்டர்டெயின்மென்டின் தலைவர் கரே பர்க் அறிவித்துள்ளார். முந்தைய ஆஸ்கர் நிகழ்வுகளில் தொகுப்பாளராக இருந்த கெவின் ஹார்ட், அதிலிருந்து விலகிய பின் 2019ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது முதன்முறையாக தொகுப்பாளர் இல்லாமல் நடைப்பெற்றது. தற்போது இந்த வருடமும் அவ்வாறே ஆஸ்கர் விருது நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.