இந்தியாவின் மிகப்பெரும் திரை ஆளுமைகளான மணிரத்னம், ஜெயேந்திரா பஞ்சாபகேசன் இணைந்து தயாரித்திருக்கும் படம் நவரசா. 9 இயக்குநர்கள் இணைந்து இயக்குயுள்ள ஆந்தாலஜி திரைப்படத்தின் டீசர் இன்று (ஜூலை 9) வெளியானது.
இதுகுறித்து மணிரத்னம், ஜெயேந்திரா பஞ்சாபகேசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “மனித உணர்வுகளின் 9 உணர்வுகளை மையமாகக் கொண்டு ஒன்பது கதைகள் அடங்கிய இத்திரைப்படம் நெட்ஃபிக்ஸ் தளத்தில் வரும் ஆகஸ்ட் ஆறாம் தேதி 190 நாடுகளில் வெளியாகிறது. இதில் தமிழ் திரையுலகை சேர்ந்த முன்னணி நட்சத்திரங்கள், இயக்குநர்கள், தொழில் நுட்ப வல்லுநர்கள் இணைந்திருக்கிறார்கள்.
இதில் நடித்திருக்கும் பிரபலங்கள், கொடிய நோய்த்தொற்று பரவலால் முடங்கியிருக்கும் திரைத்துறை தொழிலாளர்களுக்கு உதவும் வகையில், படத்திற்காக எந்த ஊதியமும் இல்லாமல், சுய விருப்பத்தின் பேரில் பணிபுரிந்துள்ளனர்.
ஒரு நல்ல விஷயத்துக்காக நிதி திரட்டும் பணிகளை நாங்கள் பல்லாண்டுகளாகச் செய்து வருகிறோம். ஆனால் இந்த உலக பொது முடக்கம் எங்கள் முகத்தில் அறையும் உண்மையை எடுத்து சொல்லியது. நோய் தொற்றால் ஏற்பட்ட இந்த பொது முடக்கத்தினால் திரைத்துறைதான் மிகப்பெரும் பாதிப்பை பெற்றுள்ளது என்கிற உண்மையை உணர்ந்தோம்.
சக திரை தொழிலாளர்களுக்காக, ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்று நோக்கத்தில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த யோசனையை எங்களது சக, முன்னணி படைப்பாளிகள், நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்களிடம் எடுத்துச் சொல்லியபோது, அவர்களின் ஆதரவு பிரமிப்பு தருவதாக இருந்தது. அனைவரும் வெகு உற்காசத்துடன் பணிபுரியச் சம்மதித்தார்கள்.
இந்த உன்னத படைப்பினை உங்கள் பார்வைக்கு வைப்பதில் பெருமை கொள்கிறோம். நம் திரைத்துறை கலைஞர்கள், வல்லுநர்களின் திறமையை எடுத்துக்காட்டும், இந்த அற்புத ஆந்தாலஜி திரைப்படம் 12,000 திரைத்துறை தொழிலாளர்களுக்கு இந்த பொது முடக்கத்தில் ஆதரவைத் தந்துள்ளது” என குறிப்பிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: வெளியானது மணிரத்னத்தின் 'நவரசா' டீசர்!