எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் ரஜினி, லட்சுமி, சரிதா உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வெளியான திரைப்படம் ‘நெற்றிக்கண்’. 1981ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தில் ரஜினி இரட்டை வேடத்தில் நடித்து அசத்தியிருப்பார். கவிதாலயா தயாரிப்பில் உருவான இந்தப் படத்தின் கதையை எழுதியவர் விசு. இவர் பல நகைச்சுவை திரைப்படங்களை இயக்கியவர். தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் மிகப் பிரபலமான நகைச்சுவை நடிகராக வலம்வந்தவர்.
இந்நிலையில் ‘நெற்றிக்கண்’ படத்தை தனுஷ் ரீமேக் செய்வதாக தகவல் வெளியானது. இதையறிந்த விசு, கவிதாலயா தயாரிப்பு நிறுவனத்திடம் அனுமதி பெற்றிருந்தாலும், கதாசிரியர் என்ற முறையில் என்னிடம் இதுகுறித்து விவாதித்திருக்க வேண்டும் என்று வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
தற்போது இது குறித்து தனுஷ் விசுவை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு, 'நெற்றிக்கண்' படத்தின் ரீமேக்கில் நடிக்க எந்தத் திட்டமும் இல்லை. இது குறித்து வெளியாகும் செய்திகள் அனைத்தும் வதந்தி என்று கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தனுஷ் இப்போது கார்த்திக் சுப்பாராஜின் படத்திலும், மாரி செல்வராஜின் படத்திலும் பிஸியாக நடித்து வருகிறார்.
இதையும் வாசிங்க: சிவராத்திரி: குடும்பத்தினருடன் தனுஷ் குலதெய்வ வழிபாடு!