நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ் கடந்த 9ஆம் தேதி, 3 கோடி ரூபாயை கரோனா வைரஸ் தடுப்பு நிதியாக அளிப்பதாக அறிவித்திருந்தார். இதில் தமிழ்நாடு அரசுக்கு 50 லட்சம் ரூபாய் கொடுப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு, கரோனா வைரஸ் நோய்த்தடுப்பு, நிவாரணப் பணிகளுக்கு 7.4.2020 முதல் 13.4.2020 வரை 10 நாட்களில் நிவாரணத் தொகை வழங்கியவர்களின் பட்டியலை வெளியிட்டது. அந்தப் பட்டியலில் ராகவா லாரன்ஸின் பெயர் இடம்பெறவில்லை.
தமிழ்நாடு அரசு, இதுவரை கரோனா தடுப்பு நிதியாக 134 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாகவும்; அந்த நிதியைக் கொடுத்தவர்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. பட்டியலில் நடிகர் அஜித்குமார் 50 லட்சமும், சிவகார்த்திகேயன் 25 லட்சமும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு கோடியும் தந்ததாக விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், ராகவா லாரன்ஸ் அறிவித்த 50 லட்சம் ரூபாய் குறித்த எந்தத் தகவலும் இந்தப் பட்டியலில் இல்லை. இதனால், ராகவா லாரன்ஸ் உண்மையிலேயே பணம் கொடுத்தாரா என்ற சந்தேகத்தை நெட்டிசன்கள் எழுப்பியுள்ளனர்.
ஏற்கெனவே ஜல்லிக்கட்டுக்காக ராகவா லாரன்ஸ் ஒரு கோடி ரூபாய் கொடுப்பதாக அறிவித்து இருந்தார் என்றும்; ஆனால் அதில் அவர் ஒரு பைசா கூட கொடுக்கவில்லை என்றும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். அதேபோல், கரோனா வைரஸ் தடுப்பு நிதியாக வெறும் அறிவிப்பு மட்டும் வெளியிட்டு உள்ளாரா என்றும் நெட்டிசன்கள் சந்தேக கேள்வி எழுப்பியுள்ளனர்.
அறிக்கை வெளியிட்ட ராகவா லாரன்ஸ் பணம் கொடுக்காமல் இருக்க மாட்டார் என்றும்; விரைவில் அவர் நிதி கொடுப்பார் என்றும் ஒரு சிலர் ராகவா லாரன்ஸுக்கு ஆதரவாகவும் பேசி வருகின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம்!
இதையும் படிங்க: 'தயவு செய்து மறுபரிசீலனை செய்யுங்கள்': தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்த ராகவா லாரன்ஸ்!