இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரித்த ’பரியேறும் பெருமாள்’, ’இரண்டாம் உலகப் போரின் குண்டு’ ஆகிய படங்கள் பெரும் வெற்றி பெற்றன.
இவற்றைத் தொடர்ந்து இந்நிறுவனம் வெளியிடவுள்ள அடுத்த திரைப்படம் ’குதிரைவால்’. கலையரசன் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் ஃப்ர்ட்ஸ் லுக் போஸ்டர் நேற்று (ஆக. 31) வெளியானது.
இத்திரைப்படம் குறித்து நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தினர் கூறுகையில், “வித்தியாசமான முயற்சிகளை ஊக்கப்படுத்தும் வகையில் விரைவில் 'குதிரைவால்' படத்தை வெளியிட உள்ளோம். 'குதிரைவால்' படம் வழக்கமான திரைப்படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட படமாக வந்திருக்கிறது. அறிமுக இயக்குநர்கள் மனோஜ் லியோனல் ஜாசன் - ஷ்யாம் சுந்தர் ஆகியோர் இப்படத்தை இயக்கியுள்ளனர்.
திரைப்படத்திற்கு ராஜேஷ் கதை எழுதியிருக்கிறார். உளவியல் சிக்கல்கள், ஆழ்மனக் கற்பனைகள், டைம் டிராவல் ஆகியவை குறித்த ஒரு அறிவியல் புனைவுப்படமாகவும், வழக்கமான சினிமாவிலிருந்து மாறுபட்டதாகவும் , மேஜிக்கல் ரியாலிச சினிமாவாக இத்திரைப்படம் இருக்கும்.
தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, இந்திய சினிமாவிலேயே ஒரு புதிய முயற்சியாக உருவாகியுள்ள இத்திரைப்படம், நிச்சயம் பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தைக் கொடுக்கும். படத்தின் பெரும்பாலான காட்சிகள் கிராபிக்ஸ் முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது போன்ற திரைப்படங்கள் தமிழில் மிகக்குறைவு.
கலையரசன், அஞ்சலி பாட்டில் இருவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளிவந்துள்ளது. திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது” என்றனர்.