சென்னை: திரைப்படத்துறையில் இருக்கும் பிரச்னைகள் அனைத்தையும் பேசி தீர்க்க வேண்டும். இதற்கான முயற்சியில் ஈடுபடவுள்ளேன் என்று டி. ராஜேந்தர் கூறியுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் விநியோகஸ்தர்கள் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில், அந்தச் சங்கத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார் நடிகரும், இயக்குநரும், லட்சிய திமுக தலைவருமான டி. ராஜேந்தர். இதையடுத்து சென்னை தி நகரில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
’சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தின் திரைப்பட விநியோகஸ்தர் சங்கத் தலைவராக தேர்வாகி பொறுப்பேற்றுள்ளேன். திரைப்படங்கள் வெளியாவதில் தொடர்ந்து பல பிரச்னைகள் இருக்கின்றன.
ஜிஎஸ்டி வரி விதிப்பால் சினிமா துறையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக ஏற்கனவே போராட்டம் நடத்தி இருக்கிறோம். கேளிக்கை வரி 8 விழுக்காடு தமிழ்நாடு அரசு ஏன் விதிக்க வேண்டும். இதுதொடர்பாக திரையரங்கு உரிமையாளர்களிடம் பேசி, அரசுடன் பேச இருக்கிறோம்.
சினிமா துறையை மறுசீரமைப்பு செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது. திரையரங்கு கட்டணம் அதிகமாக இருக்கிறது. சாதாரண மக்கள் சினிமா பார்ப்பது குறைந்துவிட்டது. தமிழ் சினிமா சந்திக்கும் பிரச்னையை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளோம்.
பாகுபலி போன்ற மிகப் பிரமாண்டமான படங்களைக்கூட மக்கள் ஆயிரம் ரூபாய் கொடுத்து பார்க்கவில்லை. தர்பார் போன்ற முக்கிய படம் வெளியாகும்போது சில திரையரங்கும் மூடுவதில்லை. அந்த நேரத்தில் கட்டணத்தை அதிகமாக்க மறைமுகமாக திட்டமிடுகின்றனர்.
திரைப்பட நடிகர்களை, அரசு எதிரியாக பார்க்கக்கூடாது. முதலமைச்சர், துணை முதலமைச்சரை சந்தித்து பல கோரிக்கைகளை முன் வைத்து பேச இருக்கிறோம். திரைப்படம் மூலம் வரும் லாபத்தில் வெளிப்படைத் தன்மை அவசியம். சில விஷயங்கள் மறைக்கப்படுகின்றன.