கரிசல் காட்டு மண்ணில் வாழும் மக்களின் வாழ்வியலையும், விவசாயத்தையும் மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் 'நெடுநெல்வாடை'. இப்படத்தை தமிழ் சினிமாவில் முதன் முறையாக ஒரே கல்லூரியில் படித்த ஐம்பது நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து தயாரித்திருப்பது சினிமா ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.
ஈராயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழ் இலக்கியத்தின் பெயரை தலைப்பாக கொண்டு 'நெடுநெல்வாடை' படத்தை இயக்குநர் செல்வகண்ணன் இயக்கியுள்ளார். படத்தின் பெயரில் மட்டும் புதுமை இல்லை. படத்தின் இசை வெளியீட்டு விழாவில் எந்த ஒரு சினிமா பிரபலங்களை அழைக்காமல் மக்களின் முன்பு இந்த படத்தில் பணியாற்றிய ஐம்பது பேரும் சேர்ந்து படத்தின் இசை ஆல்பத்தை வெளியிட்டு மக்களின் பாராட்டுக்களையும் பெற்றனர்.
நெடுநெல்வாடை படத்தில் இளங்கோ, அஞ்சலி நாயர்,பூ ராமு, மைம் கோபி ஆகியோர் நடித்துள்ளனர். ஊர் மண்வாசத்தையும் காதலோடு சென்டிமென்டையும் சோகம் இல்லாமல் மக்களின் இதயத்தை கவர காத்திருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் கதாநாயகி என்ன செய்கிறார் என்று தெரிந்தால் பலரும் ஆச்சர்யப்படுவார்கள்.
படத்தின் நாயகி அஞ்சலி நாயர் விமான பணிப்பெண்ணாக பணியாற்றி வருகிறாராம். கேரளத்தை சேர்ந்த அஞ்சலிக்கு படத்தில் நடிக்க வேண்டும் என்பது ரொம்ப நாள் ஆசையாக இருந்து வந்துள்ளது. இவர் மாடலிங், விளம்பர படங்களில் நடித்து கொண்டிருக்கும்போதே மலையாள படங்களிலும் நடித்து வந்துள்ளார்.
மாடலிங் ஒருங்கிணப்பாளர் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்திருக்கும் அஞ்சலி நாயர் தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருவதாக அவரே தெரிவித்துள்ளார்.