தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார் நயன்தாரா. அறம், ஐரா, மாயா, டோரா, கோலமாவு கோகிலா உள்ளிட்ட பெண்களை மையப்படுத்தும் கதைகளில் நடித்துவருகிறார். இப்படங்களும் பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு நிகரான வசூலையும் பெற்றுவருகின்றன.
இந்நேரத்தில் அஜித், சூர்யா, விஜய் உள்ளிட்ட மாஸ் ஹீரோக்களின் படங்களிலும் ஜோடியாக நடித்துவருகிறார். சமீபத்தில் அஜித் உடன் நயன்தாரா நடித்த விஸ்வாசம் பெரிய ஹிட் அடித்தது.
தற்போது, பேட்ட படத்திற்கு பிறகு இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 'தர்பார்' படத்திலும், அட்லி-விஜய் கூட்டணியில் உருவாகும் ‘தளபதி 63’ படத்திலும் ஜோடியாக நடித்துவருகிறார் நயன்தாரா. அதேபோன்று, இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப் படமான 'பொன்னியின் செல்வன்' படத்திலும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரை உலகின் மிகவும் பிஸியான நடிகையாக பார்க்கப்படும் நடிகை நயன்தாரா, தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க உள்ளார். இதனை, கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், நயன்தாரா குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளது. இது என்ன நிகழ்ச்சியாக இருக்கும் என்று அவரது ரசிகர்கள் மண்டையை பிய்த்து வருகின்றனர்.
மக்களிடையே வெகு பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸின் மூன்றாம் பாகம், கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட உள்ளது. விஜய் டிவியில் ஒளிப்பரப்பப்பட்ட பிக்பாஸ்- 1 மற்றும் 2ஆம் பாகங்களுக்கு நடிகர் கமல், தொகுப்பாளராக இருந்தார். தற்போது பிக்பாஸ் மூன்றாம் பாகத்தில் நடிகை நயன்தாரா தொகுப்பாளராக இருப்பார் என்று தெரிகிறது.