ஒன்பது முன்னணி இயக்குநர்கள், ஒன்பது முன்னணி ஒளிப்பதிவாளர்கள், ஒன்பது முன்னணி இசையமைப்பாளர்கள் இணைந்து நவரசங்களை மையமாக வைத்து 'நவரசா' என்னும் ஆந்தாலஜி படத்தை இயக்கியுள்ளனர்.

நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ள இப்படத்தை மணிரத்னம், ஜெயேந்திரா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படம் ஆகஸ்ட் 6ஆம் தேதி வெளியாகிறது.
கோபம், சிரிப்பு, வெறுப்பு உள்ளிட்ட 9 ரசங்களை வெளிப்படுத்தும் விதமாக எடுக்கப்பட்டுள்ள 9 குறும்படங்களில் முன்னணி நடிகர்களான சூர்யா, விஜய்சேதுபதி, சித்தார்த், யோகிபாபு, நடிகைகள் பார்வதி, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படம் குறித்து ஏராளமான அனுபவங்களை 'நவரசா' படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர். பாடலாசிரியர் மதன் கார்க்கி கூறுகையில், கெளதம் மேனன் பாடல்கள் அதிகமாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். புதிய அனுபவமாக இருந்ததால் ரசித்து பணியாற்றினோம். 'தூரிகா' பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது என்றார்.

நவரசா புதிய அனுபவம்
தொடர்ந்து மணிரத்னம் பேசுகையில், கோபத்தை மையப்படுத்திய 'ரௌத்திரம்' படத்தை அரவிந்த்சாமி இயக்கியுள்ளார். இதில், அழகம்பெருமாள், ரித்விகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அரவிந்த்சாமி நடிக்கும்போதே நிறைய கேள்விகள் கேட்பார்.
சிரிப்பை மையப்படுத்தி 'சம்மர் ஆஃப் 92'. இதில் ரம்யா ரம்பீசன், யோகிபாபு, நெடுமுடி வேணு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பிரியதர்ஷன் இயக்கியுள்ளார் என்றார்.

தொடர்ந்து அதிதி பாலன் கூறுகையில், இயக்குநர் வசந்த் இயக்கியுள்ள பாயாசம் படத்தில் நடித்துள்ளேன். இதில் நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எனக்கு புதிய அனுபவம் கிடைத்தது என்றார்.
சூர்யா நடிக்க விருப்பம்
கெளதம் மேனன் கூறுகையில், அமைதியை மையப்படுத்தி 'அமைதி' என்ற தலைப்பிலேயே படத்தை எடுத்துள்ளார் கார்த்திக் சுப்பராஜ். இந்த கதையை கேட்ட உடன் நடிக்க ஒப்புக்கொண்டேன்.
காதலை மையப்படுத்தி 'கிடார் கம்பியின் மேலே நின்று' படத்தை இயக்கியுள்ளேன். இந்த கதையில் சூர்யா நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். ரசிகர்களின் எதிர்பார்ப்புதான் இங்கு பிரச்னை. மற்ற படங்களை பார்த்துவிட்டுதான் எனது படத்தை பார்ப்பார்கள் என்றார்.

அதன்பின் நடிகர் அதர்வா, நடிகை அஞ்சலி இணைந்து கூறுகையில், தைரியத்தை மையப்படுத்தி 'துணிந்த பின்' படம் எடுக்கப்பட்டுள்ளது. சர்ஜுன் இயக்கியுள்ளார். ஒரு நல்ல காரியத்திற்காக இத்தனை பேர் இணைந்துள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது. மணிரத்னம் தயாரிப்பில் நடித்தது மகிழ்ச்சி. இந்த கதையில் நடிப்பது சவாலாக இருந்ததாக என்றார்.
நல்ல காரியத்திற்கு இணைந்து குழு
இறுதியாக நடிகர் சூர்யா கூறுகையில், 'நவரசா' உருவானதற்கு மணிரத்னம், ஜெயேந்திரனுக்கு நன்றி. நல்ல காரியத்திற்காக இணைந்ததற்கு நன்றி. கௌதமுடன் பணியாற்றியது மகிழ்ச்சி என்றார்.
கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள திரையுலக தொழிலாளர்களுக்கு நிதி திரட்டும் வகையில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ரூ.15 கோடி பணத்தை தொழிலாளர்களுக்கு பணமாக கொடுக்காமல், ரூ.1,500க்கு தனியார் வங்கி கிரெடிட் கார்டு தொழிலாளர்களுக்கு வழங்கப்படும்.

இதை அவர்கள் பயன்படுத்தி அவர்களுக்கு தேவையான மளிகைப்பொருட்களை பிரபல கடைகளில் வாங்கி பயன்படுத்திக்கொள்ளலாம். இதுவரை சுமார் 12ஆயிரம் திரைத் தொழிலாளர்கள் பயனடைந்துள்ளனர் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: விஜய் சேதுபதி எனக்கு திரைக்கதையில் உதவினார் - பிஜோய் நம்பியார்