67ஆவது தேசிய விருதுகளில் தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான 'அசுரன்' படத்துக்கு சிறந்த படம், படத்தின் கதாநாயகன் தனுஷுக்கு சிறந்த நடிகர் என இரண்டு விருதுகள் கிடைத்துள்ளன. அதேபோல், விஜய் சேதுபதி, பார்த்திபன், டி. இமான் உள்ளிட்டோர் தேசிய விருதை வென்றனர்.
இந்நிலையில், நடிகர் நாசர் தேசிய விருதை வென்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், “ ஒரு வருட காலமாய் துவண்டு கிடந்த தமிழ் திரைத்துறைக்கு சமீபத்திய விருது செய்தி , புத்துணர்ச்சி , புது வேகம் மற்றும் உத்வேகத்தை கொடுக்கிறது. என்னதான் மாபெரும் பொருளாதார வெற்றி ஈட்டினாலும் ஒரு கலைஞனுக்கு அங்கீகாரமும் விருதுகளும்தான் மனநிறைவும், அகமகிழ்வும்.
‘அசுரன்’ படத்திற்காக சிறந்த நடிகர் தேசிய விருது பெற்ற தனுஷ், சிறந்த படம் ‘அசுரன்’ படத்திற்காக தயாரிப்பாளர் எஸ்.தாணு, இயக்குநர் வெற்றிமாறன், ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்திற்காக சிறந்த துணை நடிகர் விருது பெற்ற விஜய்சேதுபதி, ‘விஸ்வாசம்’ படத்திற்கு சிறந்த இசைஅமைப்பாளர் விருது பெற்ற டி.இமான், பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு நம்பர் 7’ படத்திற்காக இரண்டு தேசிய விருது பெற்ற ஆர்.பார்த்திபன், ஒலி வடிவமைப்பு செய்த ரசூல் பூக்குட்டி, சிறந்த குழந்தை நட்சத்திரம் நாக விஷால் இப்படி தமிழ் திரையின் வரலாற்று புத்தகத்தில் பொன்னேடுகள் பொறித்த நடிகர்கள், கலைஞர்கள் , தொழில்நுட்ப வல்லுனர்கள் அனைவருக்கும் நடிகர் சமூகம் சார்பாக பெருமைமிகு வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தேசிய விருது வென்ற 'அசுரன்' சிவசாமிக்கு குவியும் வாழ்த்து!